விலை பேசும் தமிழர் வாக்கு; பின்னணியில் உள்ளவரின் பெயர் வெளியானது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வடக்கில் தமிழ் மக்கள் வாக்களிக்க விடாது கோட்டாபய ராஜபக்சவை வெற்றிபெறச் செய்யும் திரைமறைவு அரசியல் முயற்சியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


வடக்கில் தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கும் முயற்சி தோல்வியடைந்துள்ள நிலையில், தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்தியலைக் கட்டியெழுப்பும் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த முயற்சிக்கு பெரும்பாலான தரப்பினர் எதிர்ப்புக்களைத் தெரிவித்துள்ள போதிலும், ஒரு சில அமைப்புக்கள் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர்.

தமிழ் மக்களின் வாக்குகள் தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கும் என்பதால் மகிந்த தரப்பினர் இந்த முயற்சிகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.

குறிப்பாக தமிழ் மக்கள் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு வாக்களிக்கமாட்டார் என்பதால், அவர்களை வாக்களிக்கவிடாது தடுக்கும் முயற்சியில் தற்போது மகிந்த தரப்பினர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக புலம்பெயர் அமைப்புக்கள் சிலவற்றுடன், மகிந்த தரப்பில் உள்ள சிலர் பேச்சுக்களை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. புலம்பெயர் அமைப்புக்களின் ஊடாக வந்த கோரிக்கையை முன்னிறுத்தி தேர்தல் புறக்கணிப்பு பிரசாரத்தை ஆரம்பிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

தமிழர்களுக்கான தீர்வை எந்தவொரு வேட்பாளரும் எழுத்துமூலம் தர முன்வராததால், எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிப்பதில்லை என்று அறிவித்து தேர்தலைப் புறக்கணிக்கும் அறிவிப்பை மக்கள் மத்தியில் பரப்பவுள்ளதாக கூறப்படுகிறது.

மக்களின் வாக்களிக்கும் ஜனநாயக உரிமையை அரசியல் தேவைகளுக்காகவும், அரசியல் பேரம்பேசல்களுக்காகவும் இவ்வாறு திசை திருப்ப புலம்பெயர் அமைப்புக்கள் சில திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், புலம்பெயர் அமைப்புக்களில் பெரும்பான்மையானவை மக்கள் தமது ஜனநாயக உரிமையான வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக தெரியவருகிறது.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு எந்தவொரு வேட்பாளரும் தீர்வு தரமாட்டார்கள் என்பதால் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்படவுள்ளது. எனினும், தேர்தலை புறக்கணிப்பதன் மூலம் தமிழ் மக்கள் மீதான யுத்தத்தை முன்னெடுத்த தரப்பினர் ஆட்சிபீடம் ஏறுவதற்கு இது வாய்ப்பாக அமையும் என்ற ஒரு தீர்க்கமான வாதமும் இருக்கிறது.

இந்த நிலையில், மகிந்த ராஜபக்ஸவின் சில தரப்பினர் புலம் பெயர் அமைப்புக்களுடன் செய்துகொண்டுள்ள இரகசிய அரசியல் கொடுக்கல் வாங்கல்களுக்காக வடக்கு கிழக்குத் தமிழர்கள் தமது ஜனநாயக உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.