வில்பத்துவில் முஸ்லிம் மக்களோ, அமைச்சர் ரிஷாட் பதியுதீனோ எந்தவிதமான காடழிப்புக்களிலும் ஈடுபடவில்லையெனவும் வில்பத்து சரணாலயத்தை அவர்கள் ஆக்கிரமித்து வீடுகளை அமைத்துள்ளதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டு முற்றிலும் பிழையானதென சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று(04) கொழும்பில் இடம்பெற்ற போது வில்பத்து தொடர்பில் ஊடகவியலாளர் ஓருவர் கேட்ட கேள்வியொன்றுக்கு
பதிலளிக்கையிலேயே அமைச்சர் ராஜித இந்த கருத்துக்களை முன்வைத்தார்.
இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் ராஜித மேலும் கூறியதாவது,
“வில்பத்து விவகாரம் தொடர்பில் நாம் தெளிவான நிலைப்பாட்டில் இருக்கின்றோம். இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் மீண்டும் தமது பூர்வீகக் காணிகளிலேயே குடியேற வேண்டும், குடியேற்றப்பட வேண்டும். முஸ்லிம்கள் பூர்வீகக் காணிகளில் வாழ்ந்ததற்கான ஆவணங்களையும் ஆதாரங்களையும் அவர்கள் கொண்டிருக்கின்றனர்.
அமைச்சர் றிசாட், கடந்த வருடம் வில்பத்து தொடர்பிலான தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் சம்பந்தமான உண்மை நிலைகளை விளக்கியதை நானும் தொலைக்காட்சியில் பார்த்தேன்.
அந்த விவாதத்தில் அவர் முஸ்லிம்கள் அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்ததற்கான வலுவான ஆதாரங்களையும் அங்குள்ள பள்ளிவாசல்கள், கிணறுகள் ஆகியவற்றின் புகைப்படங்களையும் காட்டினார்.
1915 ம் ஆண்டு காலப்பகுதியிலான உறுதிப்பத்திரம் பேமிட் ஆகியவற்றையும் பகிரங்கமாக காட்டினார். அமைச்சர் றிசாட் சிறு வயதிலேயே புலிகளினால் துரத்தப்பட்டவர் வட மாகாணத்தில் வெளியேற்றப்பட்டு புத்தளத்துக்கு வந்து அகதிகளுடனேயே வாழ்ந்தவர்.
இப்போது அவர் அமைச்சராகிவிட்டார். வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் தங்களுடன் வாழ்ந்த ஒருவர் அமைச்சராக இருக்கும் போது அவரிடமே தமது பிரச்சினைகளைக் கூறுவர்.
அவர்களின் பிரச்சினைகளை அமைச்சர் கேட்டு தீர்த்து வைக்கவே வேண்டும். இவ்வாறான ஒரு நிலையில் நான் இருந்தாலும் கூட அதனையே மேற்கொள்வேன்.
மீள் குடியேற்ற விடயத்தை முஸ்லிம்களின் பிரச்சினை தமிழர்களின் பிரச்சினையென்று பாரக்காதீர்கள் இதை ஒரு மனிதாபிமான பிரச்சினையாக பாருங்கள்..
அமைச்சர் ரிஷாட் மீள்குடியேற்ற விடயத்தில் நிதானமாகவும் மிகச்சரியாகவுமே செயற்படுகின்றார். வில்பத்தை முஸ்லிம்கள் அழிக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டை நான் முற்றாக மறுக்கின்றேன் அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை..” என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.