வில்பத்து தேசிய சரணாலய எல்லையினுள் எவ்வித காடழிப்புகளும் முன்னெடுக்கப்பட்டில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், வில்பத்து தேசிய சரணாலய எல்லைக்கு அப்பால் சட்டவிரோத குடியேற்றங்கள் அமைக்கப்பட்டிருந்தால் அது குறித்து தான் கவனம் செலுத்துவதாகவும் ஜனாதிபதி மேலும் கூறியிருந்தார்.
நேற்று(01) மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க பீடாதிபதிகளை சந்தித்து ஆஸி பெற்றதன் பிற்பாடு ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலுரைக்கையிலேயே ஜனாதிபதி மேற்குறித்து தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
வனவிலங்கு, சுற்றுச்சூழல், பாதுகாப்பு மற்றும் காடுகள் அமைச்சுக்களது செயலாளர்கள் மற்றும் பணிப்பாளர் நாயகம் ஆகியோரது உதவியுடன் வில்பத்து தேசிய சரணாலய எல்லையினை இன்னும் விரிவாக்கி புதிதாக விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை வெளியிட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்திருந்தார்.
இயற்கை வள பாதுகாப்பு தொடர்பில் அரச திட்டமொன்றினை சட்ட நடவடிக்கையுடன் நடைமுறைப்படுத்தவும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறிய ஜனாதிபதி, இயற்கை வன அழிப்பின் பின்னணியில் சட்டவிரோத வர்த்தகக் குழுக்கள் உள்ளதாகவும் அவர்களை கண்காணிக்க முப்படையினரினை செயல்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் கூறியிருந்தார்.
வில்பத்து உள்ளிட்ட அனைத்து வனப்பகுதிகளுக்கும், நவீன தொழில்நுட்ப வசதியினைக் கொண்டு வானிலிருந்தே கண்காணிக்கும் நடைமுறைகள் முன்னெடுக்க ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு கடந்த காலங்களில் அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.