வீசா இரத்து செய்யப்பட்டதை எதிர்த்து பிரித்தானிய யுவதி மனு தாக்கல்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

காலி முகத்திடல் போராட்டத்துக்கு உதவி ஒத்தாசை வழங்கும் வகையில் செயற்பட்டதாக கூறப்படும் பிரித்தானிய யுவதி கிளீ பிரேஸரை ( Kayleigh Fraser)  எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் நாட்டிலிருந்து வெளியேறுமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ள நிலையில்,  அந்த உத்தரவை வலுவிழக்கச் செய்யக் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவை வலுவிழக்கச் செய்து எழுத்தாணை ஒன்றைப் பிறப்பிக்க வேண்டும் எனக் கோரி,  பிரித்தானிய யுவதி கிளீ பிரேஸரே மேன் முறையீட்டு நீதிமன்றில் இவ்வாறு ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் மற்றும்  சட்ட மா அதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தான் காலி முகத்திடல் போராட்டத்தில் நேரடியாக கலந்துகொண்டதாகவும், பின்னர்  குடிவரவு, குடியகல்வு திணைக்களம்  தான்தோன்றித் தனமாக தனது வீசாவை இரத்துச் செய்துள்ளதாகவும் மனுதாரர் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எந்த நியாயமான அடிப்படைகளும் இன்றி குடிவரவு குடியகல்வு திணைக்களம் எடுத்த தீர்மானத்தை இரத்து செய்து உத்தரவு பிறப்பிக்குமாறு இம்மனுவில் குறித்த யுவதி கோரியுள்ளார்.