வெற்றிக்காக சுழற்பந்தை நம்பியிருக்க முடியாது – கிறிஸ் கெய்ல்

இந்திய கிரிக்கெட் அணியின் பலமாக சுழற்பந்து வீச்சு இருக்கிறது. உள்ளூர் மைதானங்களில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் சுழற்பந்து வீரர்களால் தான் வெற்றி கிடைக்கிறது.

சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் தான் இந்திய ஆடுகளங்களும் அமைக்கப்படுகிறது.

வெங்கட் ராகவன், பிஷன்சிங் பெடி, சந்திரசேகர், பிரசன்னா, வினோமன்காட், கும்பளே, துலீப் கோஷி, ஹர்பஜன்சிங் போன்ற திறமை வாய்ந்த சுழற்பந்து வீரர்களால் இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் அதிகமான வெற்றிகள் கிடைத்து இருக்கிறது.

தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகளில் உள்ளூர் மைதானத்தில் விளையாட இருக்கிறது. டெஸ்ட் நடைபெறும் மொகாலி, பெங்களூர், நாக்பூர், டெல்லி ஆகிய மைதானங்கள் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் அமைக்குமாறு இந்திய அணி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

அஸ்வின், அமித் மிஸ்ரா, ரவிந்திர ஜடேஜா ஆகிய 3 சுழற்பந்து வீரர்கள் மீது இந்த டெஸ்ட் தொடரில் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்நிலையில் இந்திய அணி டெஸ்ட் போட்டியின் வெற்றிக்காக சுழற்பந்து வீச்சை இனி நம்பி இருக்க முடியாது என்று வெஸ்ட்இண்டீஸ் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ்கெய்ல் கூறியுள்ளார்.

டெல்லியில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இது தொடர்பாக கூறியதாவது:–

இந்திய அணி உள்ளூரில் விளையாடும் டெஸ்டில் சுழற்பந்து வீச்சை முக்கிய ஆயுதமாக பயன்படுத்துகிறது. ஆனால் தற்போதைய சூழலில் சுழற்பந்தை எதிர்கொள்வதில் எதிர் அணி வீரர்கள் சிறப்பாக இருக்கிறார்கள்.

இதற்கு ஐ.பி.எல். போட்டியே காரணம். ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் வெளிநாட்டு வீரர்கள் ஆடுகள தன்மையை நன்றாக அறிந்து சுழற்பந்து வீச்சை நல்ல முறையில் கையாள்கிறார்கள்.

இதனால் டெஸ்ட் வெற்றிக்காக சுழற்பந்து வீச்சை இனி நம்பி இருக்க முடியாது.

தென்ஆப்பிரிக்க அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் இந்திய ஆடுகளங்களில் விளையாடிய அனுபவம் பெற்றவர்கள். இங்கு பிட்ச்களில் எப்படி பந்துவீச முடியும் என்பதை நன்றாக அறிந்து வைத்து இருப்பார்கள். அவர்களுக்கு இது எல்லா வகையிலும் உதவியாக இருக்கும்.

இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றியதால் தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டியில் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கும்.

அதேநேரத்தில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இருக்கும். இதனால் இந்தியா– தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.

இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் டெஸ்டில் வீழ்த்துவது என்பது தென்ஆப்பிரிக்காவுக்கு சவாலானதாகும்.

எனவும்  கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.

தென்ஆப்பிரிக்க அணியில் உள்ள டிவில்லியர்ஸ், டுமினி, டுபெலிசிஸ், ஸ்டெய்ன், இம்ரான் தாகீர், மார்னே மார்கல் ஆகியோர் ஐ.பி.எல். போட்டியில் விளையாடி வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.