(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய அரசின் திட்டங்களில் ஒன்றான பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் பட்டதாரிகள் சிலருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ஒருங்கிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் எதிர்ப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுத்துள்ளது.
இன்று பிற்பகல் கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆரம்பித்த இந்த ஆர்ப்பாட்ட பேரணி தற்போது ஜனாதிபதி செயலகத்தை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு 42,902 பேருக்கு தொழில் வாய்ப்புக்கான கடிதம் வழங்கப்பட்டு பின்னர் அண்மையில் அதில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது அநீதியான செயற்பாடு என்றும், தேர்தலை குறியாகக் கொண்டு தேர்தலுக்கு முன்னர் வேலைவாய்ப்பிற்கு ஒரு கடிதமும் பின்னர் தேர்தலுக்கு பின்னர் மற்றுமொரு கடிதமும் வழங்கப்பட்டுள்ளமையானது அரசின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அநீதி இழைக்கப்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.
செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படுகின்ற 150,000 பேரை தொழிலில் அமர்த்தும் நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
தகுதிவாய்ந்த பட்டதாரிகளை அவர்களின் பாடத்திட்டங்களுடன் தொடர்புபட்ட துறைகளில் தொழிலுக்கு அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
குறைந்த வருமானம் உடையவர்களுக்கான ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கு தகுதியானவர்களை தெரிவு செய்யும் போது, அனைத்து கிராம சேவை பிரிவுகளிலும் இருந்து வறுமை நிலையில் அதி கூடியவர்களை தெரிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்
அரச சேவையிலுள்ள பலவீனங்களையும் குறைபாடுகளையும் நிவர்த்திக்கும் வகையில் தொழிற்பயிற்சி அளிக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ள போதிலும் அதற்கான சுற்றுநிரூபத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.