வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள புகையிரத பணியாளர்களுக்கு மீண்டும் எச்சரிக்கை…

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள புகையிரத பணியாளர்களுக்கு மீண்டும் பணி தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவுக்குள் பணிக்குத் திரும்பாத ஒப்பந்த பணியாளர்கள் சேவையிலிருந்து நீக்கப்படுவதாக புகையிரத திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேவேளை, ஏனைய பணியாளர்கள் பணியிலிருந்து விலகியதாக கருதப்படுவர் என்றும் புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளர் விஜய சமரசிங்ஹ இதனை தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா மற்றும் புகையிரத திணைக்களம் இணைந்து இந்த தீர்மானத்தை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட ரயில் வேலை நிறுத்த போராட்டம் இன்று(13) 7வது நாளாகவும் தொடர்கின்றது.

ரயில் பணிப்புறக்கணிப்பு காரணமாக நேற்றைய தினம் 45 ரயில் போக்குவரத்து சேவைகளே இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமைச்சரவை உப குழுவுடன் இன்று(13) பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், பணிப்புறக்கணிப்பு குறித்து இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ள உள்ளதாக ரயில்வே தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

ரயில் பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் அமைச்சர் சரத் அமுனுகம தலைமையிலான அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவுடன் இன்று(13) பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்க செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரயில் பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இலங்கை போக்குவரத்து சபையின் சேவையாளர்களது விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக
இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்த்தன தெரிவித்துள்ளார்.