வைபர் தடையினை நீக்கினாலும் பேஸ்புக், வட்ஸ்அப் தடையினை நீக்காதற்கான காரணம் இதுதான்…

சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் வைபர் முதலான சமூக ஊடகங்கள் பாவனை தடை தொடர்கின்ற நிலையில், நேற்று(13) நள்ளிரவு முதல் வைபர் மீதான தடை நீக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் வைபர் மீதான தடை நீக்கக் காரணம் என்னவென்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிப்பதாவது;

‘..சமூக வலைத்தளங்கள் மீது தடை விதிக்கப்பட்டமையால், வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்கள் தமது உறவினர்களுடன் தொடர்பாடலை மேற்கொள்ள சிரமங்களை எதிர்நோக்கியமை தொடர்பிலும், வர்த்தகர்களுக்கும், இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கும் கடந்த தினங்களில் ஏற்பட்ட அசௌகரிய நிலை குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

குறித்த விடயங்களைக் கருத்திற் கொண்டு ஆரம்ப கட்ட நடவடிக்கையாக வைபர் சமூக வலைத்தளத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடையை 13ம் திகதி நள்ளிரவு முதல் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“வட்ஸ்அப் தடைக்கு காரணம் பேஸ்புக் ஊடாக பரவலாகும் வீடியோக்களை வட்ஸ்அப் குழுக்களில் பகிர்வதை தடுக்கவே.. எவ்வாராயினும் இரண்டினதும் தற்காலிகத் தடையினை விரைவில் நீக்கவுள்ளோம், பேஸ்புக் தடை நாளை மறுதினம்(16) வழமைக்கு திரும்பும்” என அரசு ஏலவே அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது

எவ்வாறாயினும், நாட்டில் மீளவும் அசாதாரண சூழ்நிலை ஒன்று உருவாகாமல் இருக்க சமூக வலைதளங்கள் குறித்து சில கட்டுப்பாடுகள் குறித்து சமூக வலைதள நிறுவனங்களுடன் கலந்துரையாட உள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சரியான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஒழுங்குமுறைகள் குறித்து ஆராய்ந்து தடைக்குள்ளாகியுள்ள சமூக வலைதளங்களுக்கு மீளவும் பிரவேசிக்க வழிவகுத்துக் கொடுக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

சமூக வலைதளங்களது தடையினைத் தொடர்ந்து இனங்களுக்கு இடையிலான குரோத பேச்சுக்கள் குறைந்துள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் இலங்கை வாழ் மக்கள் தற்போது VPN தொழில்நுட்பம் மூலம் பேஸ்புக் இற்கு உட்பிரவேசிப்பதாக Alexa எனும் இணையத்தளத்தின் தரவரிசைகள் குறித்து தெரிவிக்கும் உத்தியோகபூர்வ தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த தொழில்நுட்பத்தினூடாக உட்பிரவேசித்தல் சட்டவிரோதமானது என தொழில்முறை இணைய ஊடகவியலாளர் சங்கத்தின் உறுப்பினர் கனிஷ்க ராஜகருணா தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையினை கட்டுப்படுத்த தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு கடந்த 07ம் திகதிமுதல் சமூக வலைதளங்களுக்கு தற்காலிகத் தடையினை விதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

(-Rishma)