வோர்னரின் அதிரடியில் ஆஸி அணிக்கு வெற்றி..

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 5ஆவது போட்டியிலும் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி, இத்தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

பல்லேகலவில் இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து, இத்தொடரில் 5ஆவது தடவையாகவும் முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பைப் பெற்றது.

இதன்படி களமிறங்கிய இலங்கை அணி, ஆரம்பத்தில் சிறப்பான ஆரம்பத்தைப் பெற்று, 13.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி, 73 ஓட்டங்களுடன் பலமமான நிலையில் காணப்பட்டது.

ஆனால், அதன் பின்னர் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்த அவ்வணி, 40.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 195 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. துடுப்பாட்டத்தில் தனுஷ்க குணதிலக 39 (65), தனஞ்சய டி சில்வா 34 (59), குசல் மென்டிஸ் 33 (36), சச்சித் பத்திரண 32 (38) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் மிற்சல் ஸ்டார்க் 3, அடம் ஸாம்பா 2, ட்ரவிஸ் ஹெட் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

196 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, முதலாவது விக்கெட்டை 11 ஓட்டங்களுக்கும் இரண்டாவது விக்கெட்டை 25 ஓட்டங்களுக்கும் இழந்து தடுமாறிய போதிலும், அணித்தலைவர் டேவிட் வோணரும் ஜோர்ஜ் பெய்லியும் இணைந்து, மூன்றாவது விக்கெட்டுக்காக 132 ஓட்டங்களைப் பகிர்ந்து, 43 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அவுஸ்திரேலியா அடைய உதவினர்.

துடுப்பாட்டத்தில், இலங்கையில் வைத்து அவுஸ்திரேலியர் ஒருவர் பெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டிச் சதம் என்ற பெருமையைப் பெற்ற டேவிட் வோணர், 126 பந்துகளில் 106 ஓட்டங்களைப் பெற்றார். தவிர ஜோர்ஜ் பெய்லி, 73 பந்துகளில் 44 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் டில்ருவான் பெரேரா 3, தனஞ்சய டி சில்வா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக டேவிட் வோணரும், தொடரின் நாயகனாக ஜோர்ஜ் பெய்லியும் தெரிவாகினர்.

இரு அணிகளுக்குமிடையிலான 2 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடர், நாளை இடம்பெறவுள்ள போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.