பங்களாதேஷ் அணியின் டெஸ்ட் மற்றும் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணித் தலைவர் ஷகிப் அல் ஹஸனின் விரலில் ஏற்பட்ட காயம் மோசமாகியுள்ளதைத் தொடர்ந்து, அக்காயம் எவ்வாறு முகாமைத்துவம் செய்யப்பட்டது என்பது தொடர்பாக சர்ச்சை நிலவுகின்றது.
பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஸ்முல் ஹஸனினால் திடீரென நேற்றுமுன்தினம்(09) நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்;
“இவ்வாறான பெரிய அவதானத்தினை எடுக்க வேண்டாம் என நான் அவரை (ஷகிப் அல் ஹசனை) வினவினேன். வைத்தியரொருவரிடம் சென்று பேசுமாறு நான் கூறினேன். பின்னர் இது பிரச்சினையல்ல என உடற்கூற்று நிபுணர் தனக்கு கூறினார்..
மேலும், தான் ஹஜ்ஜிலிருந்து திரும்பிய நான்கு நாட்களின் பின்னர் அமெரிக்காவிலிருந்து நேரடியாக குழாமுடன் ஷகிப் இணைந்து கொள்வார் என பயிற்சியாளர் தனக்கு மின்னஞ்சலில் அறிவித்திருந்தார்.
எவ்வாறாயினும் காயமடந்த தனது விரலை சத்திர சிகிச்சை மேற்கொண்டு ஆசியக் கிண்ண போட்டிகளை தவற விடுவதற்கான விருப்பத்தை ஷகிப் வெளிப்படுத்தியிருந்த போதும் ஆசியக் கிண்ணம் கடினமான தொடர், இவ்வாறான தொடரொன்றில் ஷகிப் போன்ற வீரரொருவர் விளையாடாமல் விட்டால் அணியின் உயிர்ப்பு வீழ்ச்சியடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன, பங்குபற்ற வேண்டும் என்பதே அனைவரதும் பிராத்தனையாக இருந்தது என்றாலும் அது கை கூடவில்லை” என நஸ்முல் ஹஸன் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில், ஆசியக் கிண்ணத்தில் பங்குபற்றியிருந்த ஷகிப், தனது விரலிலுள்ள நோ தாங்க முடியாமல் போன நிலையில், பாகிஸ்தானுடான மெய்நிகர் அரையிறுதிப் போட்டிக்கு முன்பாக தொடரிலிருந்து விலக வேண்டியிருந்தது.
பின்னர், அவர் பங்களாதேஷுக்கு திரும்பிய போது அவரது காயமடைந்த விரலில் இருந்த சிதல் அகற்றப்பட்டதுடன் அவ்விரல் தொற்றுக்குள்ளாகியமை காரணமாக குறைந்தது மூன்று மாதங்களுக்கு விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே, ஆசியக் கிண்ணத்தில் விளையாட வற்புறுத்தியிருக்காவிட்டால் ஷகிப்பின் காயம் மோசமடைந்திருக்காதென்றும் அவரின் விரல் வீங்கியிருந்தபோதும் பங்களாதேஷின் உடற்கூற்று நிபுணர் திஹன் சந்திரமோகன் தொற்றை ஏன் கண்டுபிடிக்கவில்லையென்றும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது..