இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ ஊழல் தடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதையடுத்து, முகமது ஷமிக்கான ஊதிய ஒப்பந்தம் வழங்கப்பட்டதுடன், எதிர்வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியிலும் விளையாட அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹான், காவல்துறையில் குடும்ப வன்முறைப் புகார் அளித்துள்ளார். அதுதொடர்பாக கொல்கத்தா பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஷமி-ஹசின் இடையேயான தொலைபேசி உரையாடல் பதிவு என்ற குறிப்புடன் ஓர் ஒலிப்பதிவு சமூக வலைதளங்களில் பரவி வந்தது. அதில், பிரிட்டனைச் சேர்ந்த முகமது பாய் என்ற தொழிலதிபரிடம் இருந்து, பாகிஸ்தானைச் சேர்ந்த அலிஷ்பா என்ற பெண் மூலமாக முகமது ஷமி ரூ.3 கோடி பெற்றதாக ஹசின் குற்றம் சாட்டியிருந்தார்.
இதை கருத்தில் கொண்ட வினோத் ராய் தலைமையிலான பிசிசிஐ நிர்வாகக் குழு (சிஓஏ), சம்பந்தப்பட்ட பணப் பரிவர்த்தனை குறித்து மட்டும் பிசிசிஐ ஊழல் தடுப்பு அமைப்பு விசாரணை நடத்தி இருந்தது.
அது தொடர்பாக சிஓஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
“பிசிசிஐ ஊழல் தடுப்பு அமைப்பு தனது விசாரணை அறிக்கையில், பிசிசிஐ ஊழல் தடுப்பு விதிகளின் கீழ் ஷமி விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை. பிசிசிஐ அவருக்கு “பி’ பிரிவு ஒப்பந்தத்தை அளித்துள்ளது. இதன்படி ஷமி ஆண்டுக்கு ரூ.3 கோடி அடிப்படை ஊதியமாகப் பெறுவார்.” என தெரிவித்துள்ளது.