(ஃபாஸ்ட் நியூஸ் | குருநாகல்) – குருநாகல் வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியரான ஷாபி ஷிஹாப்தீனுக்கு மீளவும் சேவையில் இணைந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஷாபி டாக்டர், இன்று இலங்கையில் இவரை அறியாதவர்கள் இருக்க முடியாது. கடந்த ஒரு மாதமாக நாட்டின் பிரதான பேசு பொருள்களில் தவிர்க்கமுடியாத ஒரு பெயராக அது மாறியிருக்கின்றது. காரணம், ஒரு கருத்தடை நாடகம், வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாக ஒரு குற்றச்சாட்டு. குற்றச்சாட்டைவிட, கருத்தடை நாடகத்தின் பெயரால் சாட்சிகள் இன்றியே இன்று ஷாபி டாக்டர் குற்றவாளியாக்கப்பட்டுவிட்டார். இது ஒரு பயங்கரமான நிலைமை.
எப்போதும் ஒருவர் தொடர்பில் விசாரணைகள் செய்து நியாயமான சந்தேகத்தின் அடிப்படையில் அவர் சந்தேக நபராக அறிவிக்கப்படுவதும், பின்னர் மேலதிக விசாரணைகளில் அல்லது வழக்கு விசாரணைகளில் சாட்சிகளின் அடிப்படையில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்படுவதுமே நியாயமான அல்லது சட்டத்தின் ஆட்சி இடம்பெறும் ஒரு நாட்டின் வழமையாக இருக்க முடியும். எனினும், ஷாபி டாக்டரின் விவகாரத்தில், அவர் சாட்சிகளின்றி குற்றவாளியாக முழுத் தேசத்துக்கும் அறிவிக்கப்பட்ட பின்னரேயே, அவருக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.
ஷாபி டாக்டருக்கு எதிராக தற்போது நியாயமாகவோ அநியாயமாகவோ இரு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. ஒன்று, வருமானத்தை மீறி சொத்து சேர்த்தமை. மற்றையது, சிங்களப் பெண்களுக்கு சட்டவிரோதமாகக் கருத்தடை செய்தமை.
இந்தக் கட்டுரை எழுதப்படும் இறுதி நிமிடம் வரையிலும் அந்த இரு விடயங்கள் தொடர்பிலும் ஷாபி டாக்டருக்கு எதிராக எந்தவொரு சாட்சியும், விசாரணையாளர்களால் கண்டு பிடிக்கப்பட்டிருக்கவில்லை என்பதுதான், ஷாபி டாக்டரை மையப்படுத்தி இடம்பெறும் நாடகத்தின் உண்மை நிலைமையை பறைசாற்றும் சாட்சி.