ஷாருக்கானுக்கு இலங்கையில் குண்டு வைத்தது யார்: ரஞ்சனின் பேச்சில் திண்டாடும் அரசாங்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட பலரின் குரல் பதிவுகள் தன்னிடம் உள்ளதாக ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டார்.

பாராளுமன்றில் இன்று(21) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், இந்த விடயம் தொடர்பான விடயங்களை விசாரிப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றினை உருவாக்க வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது தான் ஆவணங்களுடன் அதில் முன்னிலையாவதாக ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்திய பிரபல ஹிந்தி நடிகர் ஷாருக் கான் இலங்கைக்கு வந்தபோது ஷாருக்கானுக்கு குண்டு வைத்தது யார்? இது தொடர்பில் ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு தெரியும். அந்த குண்டுத் தாக்குதலில் ஷாருக்கான் பலியாகி இருந்தால் இலங்கை இன்று வரைக்கும் அதற்கான விளைவினை எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்கும் எனத் தெரிவித்திருந்தார்.

“ஷாருக்கான் மீது குண்டுத் தாக்குதல்”

கடந்த 2004ம் ஆண்டு இலங்கையில் இந்தித் திரையுலகினர் நடத்திய கலை நிகழ்ச்சியின் போது பெளத்த பிக்குகள் போராட்டம் நடத்தினர். அப்போது கைக்குண்டு வீசப்பட்டதில் ஒரு பெண் உள்பட 2 பேர் பலியாயினர்.

புத்த மத துறவியான சங்கைக்குரிய கங்கொடவில சோம தேரர் என்பவரின் முதலாமாண்டு நினைவு அன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது. எனவே இந்நிகழ்ச்சியை இரத்து செய்யுமாறு நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு பெளத்த பிக்குகள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் கோரிக்கையை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து எங்களை மீறி நிகழ்ச்சி நடத்தப்பட்டால் அரங்கம் முன்பு தீக்குளித்துத் தற்கொலை செய்து கொள்வோம் என பிக்குகள் மிரட்டல் விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நிகழ்ச்சி நடக்கவிருந்த இடத்தைச் சுற்றிலும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் நினைவு தினம் குறித்துத் தெரியாமல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு விட்டதற்கு மன்னிப்பு கேட்பதாக ஷாருக்கான் அறிவித்தார். அவரது மன்னிப்புக்கு சில பிக்குகள் இரங்கி வந்தனர், ஆனால் பெரும்பாலான பிக்குகள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்நிலையில் மறைந்த துறவி கங்கொடவில சோம தேரருக்கு ஷாருக்கான் உள்ளிட்டவர்கள் 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு நிகழ்ச்சிகள் தொடங்கின. 25,000க்கும் மேற்பட்ட இந்தியர்களும், வெளிநாட்டவர்களும் நிகழ்ச்சியைக் காண வந்திருந்தனர். இந்நிலையில் மைதானத்திற்கு வெளியே ஜாதிக ஹெல உறுமய என்ற கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஓமல்பே சோபித தேரர் தலைமையிலான சிங்கள இளைஞர்கள், இளம் பிக்குகள் கூடி பெரும் போராட்டத்தில் இறங்கினர்.

இந்நிலையில் இரவு 11.30 மணியளவில் கலை நிகழ்ச்சி நடந்த மேடைக்கு அருகே கைக்குண்டு வீசப்பட்டது. பயங்கர சப்தத்துடன் அது வெடித்துச் சிதறியதில் ஒரு பெண் உள்பட 2 பேர் பலியாயினர், 19 பேர் காயமடைந்தனர். இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரியின் மனைவி ரிது சாஸ்திரியும் அடக்கம். இவர் ஒரு நடிகை ஆவார். பலியானவர்களில் ஒருவர் பத்திரிக்கையாளர். மற்றொருவர் ஹோட்டல் சிப்பந்தி. உடனடியாக நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு ஷாருக்கான், ரிது சாஸ்திரி உள்ளிட்டவர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக கொழும்பு விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கிருந்து அனைவரும் பத்திரமாக இந்தியா திரும்பினர். முன்னதாக ரிது சாஸ்திரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றார். அவருக்கு லேசான காயங்களே இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 2 பெண்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் குண்டு வெடித்தபோது கலை நிகழ்ச்சிக்காக மேடையில் வெடிக்கப்படும் பட்டாசுகளில் ஒன்றே என்று அனைவரும் நினைத்தனர். ஷாருக்கான் கூட தொடர்ந்து ஆடினார். ஆனால் முன்வரிசை ரசிகர்களிடம் இருந்து ரத்தம் வழிந்ததைக் கண்ட பின்பே, நடந்தது குண்டு வெடிப்பு என்று உணர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.