(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு தெரிவு செய்யப்படாத குறுந்தூர ஓட்ட வீராங்கணை ஒருவர் இறுதி நேர சிபாரிசின் பேரில் அணிக்குள் இணைக்கப்பட்டுள்ளமை சர்ச்சையை தோற்றுவித்து, தெரிவுக்குழுவினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், அதற்கு 27 போட்டிகளில் பங்கேற்க இலங்கையிலிருந்து 600க்கும் அதிகமான வீர, வீராங்கணைகள் செல்லவுள்ளனர்.
தடகள அணி வீரர்கள் மொத்தம் 66 பேர். இவர்களின் பெயர்ப்பட்டியல் நேபாளத்தின் தெற்காசிய விளையாட்டு அமைப்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் தயாரிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவின் கையெழுத்துடன் மேலதிக வீராங்கனை ஒருவரை உள்வாங்குமாறு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. பதவி விலகியதாக ஹரீன் பெர்னாண்டோ 19ம் திகதி அறிவித்திருந்த நிலையில், 20ம் திகதி குறித்த கடிதத்தில் கையொப்பமிட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

கேட்வே இன்டர்நஷனல் பாடசாலையின் (GATEWAY INTERNATIONAL SCHOOL) ஷெலின்டா ஜோன்சன் என்ற வீராங்கணையே அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
தெற்காசிய விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான தேர்வு விழாவாக தேசிய சாம்பியன்ஷிப் ஓகஸ்ட் மாதம் நடைபெற்றது. இந்நிகழ்வில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்ற விளையாட்டு வீரர்கள் தெற்காசிய விளையாட்டுப் தடகள அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
தகுதிச்சுற்றில் காயமடைந்ததாக குறிப்பிட்டு, நேபாளம் செல்லும் அணியில் தன்னை இணைக்கும்படி ஷெலின்டா விடுத்த கோரிக்கையை தேர்வாளர்கள் நிராகரித்திருந்த நிலையிலேயே, ஹரீன் பெர்னாண்டோவின் தலையீட்டில் தெற்காசிய விளையாட்டு குழாமில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கடந்த ஆறு மாதத்தில் இலங்கையின் முன்னணி பெண் வீராங்கணைகளின் 200m சிறந்த பெறுபேறு
நடீஷா ராமநாயக்க – 24.49 வினாடிகள் (ஓகஸ்ட் 26)
லட்சிகா சுகந்தி- 24.49 வினாடிகள்
லட்சிகா சுகந்தி (24.50 வினாடிகள்)
லட்சிகா சுகந்தி – 24.51 வினாடிகள் (ஓகஸ்ட் 26)
ஷர்மிளா ஜோன்- 24.52 வினாடிகள் (ஓகஸ்ட் 17)
ஷெலின்டா ஜோன்சன்- 24.69 வினாடிகள் (செப்டம்பர் 11)