ஸ்பெயினின் பார்சிலோனா தீவிரவாத தாக்குதலில் இதுவரை 13 பேர் பலி..

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் உள்ள லாஸ் ராம்ப்லாஸ் என்ற சுற்றுலா பகுதியில் இருக்கும் ப்லகா கடலுன்யா பிளாசா அருகே பாதசாரிகள் சாலையை கடந்து கொண்டிருந்த போது, இன்று(18) திடீரென அங்கு வந்த வேன் ஒன்று பாதசாரிகள் மீது பயங்கரமாக மோதியது. இதனால், அங்கு கடும் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

மக்கள் மீது வேனை மோதவிட்டு அதனை ஓட்டி வந்தவன் தப்பி ஓடிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கோர தாக்குதலில் 13 பொதுமக்கள் பலியானதாகவும், 100-க்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

இது தொடர்பாக 02 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும், வேனை ஓட்டி வந்தவன் பிடிபடவில்லை. குறித்த இந்த தாக்குதலை அடுத்து நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பார்சிலோனாவின் அருகே உள்ள காம்ப்ரில்ஸ் என்ற இடத்தில் தீவிரவாதிகள் தங்கியிருந்த பகுதியை முற்றுகையிட்ட பொலிசார், அவர்களை நோக்கி சரமாரியான துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.

சில மணிநேரம் நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 1 தீவிரவாதி காயமடைந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பார்சிலோனா நகரில் நடத்திய தாக்குதலில், கொல்லப்பட்ட தீவிரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதாகவும், காம்ப்ரில்ஸ் நகரில் இரண்டாவது தாக்குதலுக்கு அவர்கள் திட்டமிட்டு இருந்ததாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சண்டையின் போது 9 பொதுமக்கள் மற்றும் ஒரு பொலிசார் காயமடைந்துள்ளதாகவும் அந்தநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

 

(rizmira)