ஸ்மித்துக்குப் பதிலாக இளம் வீரராக களமிறங்கும் ரென்ஷா…

தென்னாபிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்துக்குப் பதிலாக 21 வயது மேட் ரென்ஷா சேர்க்கப்பட்டுள்ளார்.

இவர் இதுவரை 10 டெஸ்டுகளில் அவுஸ்திரேலியா அணி சார்பில்  விளையாடியுள்ளார்.

தென்னாபிரிக்காவுக்கு எதிராக 4 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது.

கடந்த 01ம் திகதி தொடங்கிய முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரண்டாவது டெஸ்ட்டில் தென்னாபிரிக்கா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், 03-ஆவது டெஸ்ட் ஆட்டம் கடந்த 22ம் திகதி தொடங்கியது.

இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் பேன்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்த முயன்றது காணொளியில் தெளிவாக பதிவாகியது. இது ஆஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்மித் உதவியுடன் செய்யப்பட்டதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குறித்த இந்தக் குற்றச்சாட்டை ஸ்மித்தும், பேன்கிராஃப்டும் ஒப்புக் கொண்டுள்ளனர். அத்துடன், அணியின் தலைவர் பொறுப்பிலிருந்து ஸ்மித்தும், உப தலைவர் பொறுப்பிலிருந்து டேவிட் வார்னரும் விலகிக் கொள்வதாக அறிவித்தனர்.

ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் உள்பட அந்நாட்டில் பல்வேறு தரப்புகளிலிருந்து இவர்களின் செயலுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ள இந்நிலையில் இறுதி டெஸ்ட் போட்டியில் ஸ்மித் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் அவருக்குப் பதிலாக மேட் ரென்ஷா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.