ஸ்ரீலங்கன் விமான சேவை குறித்து இரு நாள் நாடாளுமன்ற விவாதம்

ஸ்ரீலங்கன் நிறுவனத்தை வேறு நிறுவனத்துடன் இணைப்பது குறித்து இரண்டு நாள் நாடாளுமன்ற விவாதம் நடத்தப்படவுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தை வேறு நிறுவனத்துடன் இணைத்து பணிகளை மேற்கொள்வது குறித்து இந்த இரண்டு நாள் விவாதத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.

மஹிந்த  ராஜபக்ஷ அரசாங்க ஆட்சிக் காலம் முதல் இதுவரையில் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ச்சியாக இதே நிலைமை நீடித்தால் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் சுமையை பொதுமக்கள் சுமக்க நேரிடும் என அரசாங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தை கூட்டு நிறுவனமொன்றாக முன்னெடுப்பதற்கு அமைச்சரவை கடந்த 26ம் திகதி அனுமதி வழங்கியுள்ளது.

எனவே வேறு நிறுவனமொன்றுடன் இணைத்து கூட்டு நிறுவனமாக ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தை முன்னெடுப்பது குறித்து அடுத்த நாடாளுமன்ற அமர்வுகளில் இரண்டு நாள் விவாதம் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதேவேளை, ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா ஆகிய விமான சேவைகளை தரமான வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாத்திரமே வழங்குவோம். எமிரேட்ஸ் முன்வந்தால் அனுமதி வழங்குவோம். இது தொடர்பில் ஆலோசனை சபையே தீர்மானிக்கும் என்று மின்சக்தி பிரதி அமைச்சர் அஜித் பீ.பெரேரா தெரிவித்துள்ளார்.