ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டமொன்று நாளை நடைபெறவுள்ளது.
கட்சியின் தீர்மானங்கள் மற்றும் கட்சித் தலைமையை விமர்சனம் செய்து கட்சி ஒழுக்க விதிகளை மீறிவரும் உறுப்பினர்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் நோக்கில் குறித்த இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை இரவு 7.00 மணிக்கு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
கட்சி ஒழுக்க விதிகளை மீறிச் செயற்பட்ட 12 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்துமாறு அண்மையில் நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்த ஒழுக்காற்று விசாரணைகளின் இறுதித் தீர்மானம் குறித்து நாளைய கூட்டத்தில் அறிவிக்கப்பட உள்ளது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.