ஸ்ரீ லங்கன் விமான சேவையை நட்டமடையச் செய்தவர்களை இன்னும் ஓரிரு தினங்களில் வெளிப்படுத்தவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்துக்கு விமானமொன்றைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கையொன்றை அமைச்சரவை அனுமதியில்லாமல் ரத்து செய்ததன் மூலம், அரசாங்கத்துக்கு 150 மில்லியன் ரூபாவை நஷ்டம் ஏற்படுத்தினார் என கூட்டு எதிர்க் கட்சி அமைச்சருக்கு எதிராக முன்வைக்கும் குற்றச்சாட்டு குறித்து வினவியபோதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.
கடந்த அரசாங்கத்தில் ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தை நாஷமாக்கியவர்கள் யார் என்பதை நான் கூற ஆசைப்படுகின்றேன். மஹிந்த ராஜபக்ஷவின் மைத்துனரை இந்நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு நியமித்தனர். இதன் மூலம் இந்த நிறுவனத்தை வங்குரோத்து நிலைக்கு கொண்டு வந்தது யார் என்பதை இந்த நாட்டு மக்கள் நன்கு அறிந்துள்ளனர்.
கண்ணாடி வீட்டில் உள்ளவர்கள் மீது கல் எறிய வேண்டாம் என நாம் ஒவ்வொரு முறையும் கூறுகின்றோம். இது கூட்டு எதிர்கட்சி வாங்கிக் கட்டிக் கொள்ளும் நடவடிக்கையாகவே நான் பார்க்கின்றேன் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.