ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 67வது நிறைவாண்டு இன்றாகும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடந்த 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
இந்த வெற்றியின் தொடர்ச்சியாக 3 ஜனாதிபதிகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து உருவாகியுள்ள நிலையில், 3ஆவது ஜனாதிபதியாகவும் தற்போதைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட்டுவருகின்றார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 67 ஆவது வருட நிறைவை முன்னிட்டு இன்று(02) முதல் பல்வேறு சமய நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
முதலாவது சமய நிகழ்வு களனி ரஜமகா விகாரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(02) மாலையும், இந்து மத சமய நிகழ்வுகள் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் ராமணாதன் தலைமையில் பம்பலப்பிட்டி திரேஷன் கோவிலில் நடைபெறவுள்ளது.
இஸ்லாமிய சமய பிரார்த்தனை நிகழ்வுகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தலைமையில் மாளிகாவத்தை பள்ளிவாயலிலும், மற்றது இராஜாங்க அமைச்சர் பௌஸி தலைமையில் தெவட்டகஹ பள்ளிவாயலிலும் நடைபெறவுள்ளன.
கிறிஸ்தவ சமய ஆராதனைகள் முன்னாள் பிரதி அமைச்சர் நியோமல் பெரேராவின் தலைமையில் சிலாபம் பெரிய ஆலயத்தில் எதிர்வரும் 03 ஆம் திகதி காலை இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.