முஸ்லிம்களின் ஹஜ் கடமையை சீரான முறையில் சட்ட ரீதியில் முன்னெடுக்க முஸ்லிம் சமய மற்றும் தபால்,தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் சட்டமூலமொன்றினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இந்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டிருந்தாலும் முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூபின் தலைமையிலான குழுவினரின் அறிக்கை தாமதப்படுத்தப்பட்டுள்ளதனாலே ஹஜ் சட்டமூலத்தையும் தாமதப்படுத்த வேண்டியேற்பட்டதாக அமைச்சர் ஹலீம் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் தனியார் சட்ட திருத்தங்களைச் செய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர் சலீம் மர்சூபே ஹஜ் சட்ட மூல வரைபுகளைத் தயாரிக்கும் குழுவுக்கும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஹஜ் கோட்டா பகிர்வு முறைக்கு உயர்நீதிமன்றம் ஏற்கனவே வழங்கியுள்ள வழிமுறைகள்(Guide Lines) மீறப்பட்டுள்ளதாக 2015 ஆம் ஆண்டு கோட்டா பகிர்வுக்கு எதிராக ஹஜ் முகவர்கள் சிலரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.