ஹம்பாந்தோட்டை எதிர்ப்பு பேரணி மீது கண்ணீர் புகை பிரயோகம்.. – ஆர்ப்பாட்டக்காரர்கள் 26 பேர் கைது..

ஹம்பாந்தோட்டையில் கூட்டு எதிரணியினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலிஸார் நீர்த் தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதுடன் கண்ணீர் புகை பிரயோகத்தையும் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது ஏற்பட்ட தீவிர நிலையை தொடர்ந்து, எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்ட 26 பேர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், காவற்துறை அதிகாரிகள் 3 பேர் காயமடைந்துள்ளதாக ஹம்பாந்தோட்டை பிரதேசத்திற்கு பொறுப்பான உயர் அதிகாரியொருவர் தெரிவித்திருந்தார்.

இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதாகவும், ஹம்பாந்தோட்டையில் உள்ள இந்திய தூதுவர் அலுவலகத்திற்கு முன்னால் இடம் பெற்ற கூட்டு எதிரணியினரின் ஆர்ப்பாட்டம் மீதே பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, ஹம்பாந்தோட்டை நீதிமன்ற அதிகார எல்லைக்குள் வீதியை மறைத்து ஆர்ப்பாட்டம் செய்தல், இந்திய தூதரக காரியாலயம், மாகம்புர துறைமுகத்திற்கு நுழையும் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடல் மற்றும் சொத்துகளுக்கும் சேதம் ஏற்படுத்துதல் ஆகிய செயற்பாடுகளுக்கு காலி நீதிவான் நீதிமன்றத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)