ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி காரணமாகக் காணிகளை இழந்த மக்களுக்கு இழப்பீடுகள் வழங்குவதற்கும் அம்மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், 2 பில்லியன் ரூபாயை, அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக, துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அலுவல்கள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி காரணமாகக் காணிகளை இழந்த மக்களுக்கு இழப்பீடுகள் வழங்கும் செயன்முறை தொடர்பாகக் கலந்துரையாடும் பொருட்டு, துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சின் அலுவலகத்தில், இன்று (02) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்திலேயே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதற்கமைய, துறைமுகத்தின் பொருட்டு காணிகளை இழந்த மக்களுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்கும் அம்மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், அமைச்சு நடவடிக்கையெடுத்துள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுக திட்டத்தில் தற்பொழுது இரு கட்டங்கள் நிறைவடைந்துள்ளன. துறைமுக நிர்மாணப்பணிகளை எதிர்வரும் நாட்களில் நிறைவுச் செய்வதற்கும் அமைச்சு நடவடிக்கையெடுத்துள்ளது. இத்திட்டத்தில் முதலாம் கட்ட நிர்மாணப் பணிகளின் பொருட்டு 1,115 ஹெக்டேயர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
இவற்றுள் 463 நிலபரப்புகள் உள்ளடங்கும். கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குப் பதிலாக வேறு நிலங்களை வழங்குவதற்கும், நிலத்தின் மற்றும் அதன் அபிவிருத்தி பெறுமதியை அடிப்படையாகக் கொண்டு இழப்பீடுகளை வழங்கும் செயன்முறை தற்பொழுது முழுமையாக நிறைவடைந்துள்ளது.
அதன் பொருட்டு செலவிடப்பட்ட 511 மில்லியன் ரூபாய், இலங்கை துறைமுக அதிகார சபையினால் வழங்கப்பட்டது. எது எவ்வாறாயினும் இரண்டாம் கட்டத்தின் பொருட்டு கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் பொருட்டு, பொது திறைசேரியால் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சுக்காக வழங்கப்பட்ட 2 பில்லியன் ரூபாய் நிதி பயன்படுத்தப்படும்” என்றார்.