ஹம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த திருத்தப்பட்ட ஒப்பந்தம் அமைச்சரவையில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பு…

சீன நிறுவனமொன்றுக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை, கையளிப்பது தொடர்பான ஒப்பந்தம் திருத்தப்பட்ட நிலையில், இன்று(21) அமைச்சரவைக் கூட்டத்தின் போது சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஹம்பாந்தோட்டைத் துறைமுக ஒப்பந்தம் தொடர்பிலான மேலதிக ஆய்வுக்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், அமைச்சரவைக் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

குறித்த குழுவினால், மூன்று தரப்புகளிடமிருந்தும் கருத்துகள் மற்றும் யோசனைகள் கோரப்பட்டிந்தன. இதன் பின்னரே, திருத்தப்பட்ட ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டது. துறைமுக அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரிகள், அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் துறைமுக விவகார அமைச்சரின் தரப்பு என்ற மூன்று தரப்புகளிடமிருந்தே, குறித்த இந்தக் கருத்துகள் மற்றும் யோசனைகள் பெறப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக, சீனா அரசாங்கத் தரப்பிலிருந்து, சைனா மேர்சன்ட் நிறுவனமும், தனது யோசனைகளை முன்வைத்துள்ளது. ஹம்பாந்தோட்டைத் துறைமுக அபிவிருத்தி நடவடிக்கையின் மூலம், சீன நிறுவனத்திடமிருந்து இலங்கைக்கு, 1.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப் பெறுவதோடு, அத்துறைமுக வளாகத்தில், 150 தொழிற்சாலைகள் நிறுவப்படவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)