ஹம்பாந்தோட்டை துறைமுக வலய ஒப்பந்தம் கைச்சாத்து ஒத்திவைப்பு..

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சில பகுதியை சீன முதலீட்டு வலயமாக மாற்றும் திட்டத்திற்கு பெரும் எதிர்ப்பலைகள் எழுந்ததை தொடர்ந்து அந்தத் திட்டம் தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்தும் நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளது.

ரணில் – மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்ற எதிர்வரும் 8ஆம் திகதியன்று இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவிருந்தது. எனினும் இந்த மாத நடுப்பகுதி வரை குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளதாக சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த திட்டம் தொடர்பான வரைவு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு, அங்கீகாரம் பெற்ற பின்னர் அதனை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைப்பதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம கூறியுள்ளார்.

இதுதொடர்பான நடவடிக்கைகளைக் கையாள்வதற்கு உபகுழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அமைச்சர்களான சரத் அனுமுகம, ரவி கருணாநாயக்க, அர்ஜுன ரணதுங்க, சாகல ரத்நாயக்க மற்றும் நிமல் சிறி பால டி சில்வா ஆகியோர் இந்த குழுவில் உள்ளனர்.

இந்நிலையில் ஹம்பாந்தோட்டை சீன முதலீட்டு வலய ஒப்பந்தம் இரத்து செய்யப்படவில்லை என்றும் மாறாக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் திகதியே ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மலிக் சமரவிக்ரம மேலும் தெரிவித்துள்ளார்.