ஹாங்காங்கில் உத்தேச கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு

(FASTNEWS | COLOMBO) – கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹாங்காங்கில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டு மாபெரும் போராட்டம் நடத்தினர்.

ஹாங்காங் முதலில் இங்கிலாந்தின் காலனி நாடாக இருந்து வந்தது. 1997-ம் ஆண்டு, அது சீனாவின் சிறப்பு நிர்வாக பகுதிகளில் ஒன்றாக மாறியது. சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இந்த நாடு உள்ளது.

இங்கிலாந்து உள்ளிட்ட 20 நாடுகளுடன் கைதிகள் பரிமாற்றத்துக்கு ஹாங்காங் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஆனால் சீனாவுடன் மட்டும் கைதிகள் பரிமாற்றத்துக்கு ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்ளவில்லை.

இது தொடர்பில் கடந்த 20 ஆண்டுகளாக இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிற நிலையில், ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது.

இது தொடர்பாக ஹாங்காங் சட்டசபையில் கடந்த மாதம் விவாதம் நடந்தபோது வன்முறை தாண்டவமாடியது. உறுப்பினர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இப்போது இந்த உத்தேச கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

ஆனால் சட்டசபையில் இந்த சட்ட திருத்தத்துக்கு ஒப்புதல் பெற்று விட வேண்டும் என்பதில் ஹாங்காங் நிர்வாகத்தலைவர் கேரி லாம் உறுதியாக உள்ளார். 12ம் திகதி இது ஓட்டெடுப்புக்கு விடப்படுகிறது. குறித்த சட்ட திருத்தத்துக்கு ஆதரவானவர்கள், இதில் தேவையான பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.