காலி மாவட்டத்தின் லங்கா கம போன்ற கஷ்டப் பிரதேசங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை தொடக்கம் ஹெலிகொப்டர்கள் வழியாக உணவுப் பொருட்கள் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.
காலி மாவட்டத்தின் லங்கா கம உள்ளிட்ட சில மலைப்பள்ளத்தாக்குக் கிராமங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படாத போதிலும், அப்பிரதேசங்களை தரைவழியாகவோ படகுகள் மூலமாகவோ சென்றடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக உணவுப் பொருட்கள் மற்றும் குடிதண்ணீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்த நிலையில் குறித்த பிரதேசங்களுக்கு ஹெலிகொப்டர் மூலம் உணவுப் பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
காலி மாவட்ட ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினரும், பொதுநிர்வாக சேவைகள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன இதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளதுடன், லங்கா கம கிராமத்திற்கு நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளை அவதானித்துள்ளார்.
அமைச்சர் வஜிர அபேவர்த்தனவுடன் வெளிநாட்டுத் தொழில்வாய்ப்புகளுக்கான பிரதியமைச்சர் மனூஷ நாணயக்காரவும் இந்தப் பயணத்தின் போது இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.