“ஒருநாள் போட்டிகளில் இருந்து நீங்கள் ஓய்வு பெற்றது எனக்கு நல்லதே” என்று அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்மித், ஹேரத்திடம் நகைச்சுவையாக கூறியுள்ளார்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 3-0 என முழுமையாக இழந்தது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் தான்.
இந்த நிலையில் அவரிடம் நீங்கள் ஒருநாள் போட்டியில் இல்லாதது நல்லதாக அமைந்துவிட்டதாக ஸ்மித் அவரிடம் நகைச்சுவை செய்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்மித் கூறுகையில், ஹேரத்திற்கு 37 வயதாகிறது. ஆனால் அவர் இன்னும் அபாரமாக பந்து வீசி வருகிறார். டெஸ்ட் தொடரில் என்னை அவர் 5 முறை ஆட்டமிழக்க செய்துவிட்டார்.
அவர் வீசும் பந்து எவ்வளவு சுழன்று வரும் என்பதை அவரே அறிய முடியாது. பிறகு துடுப்பாட்ட வீரர்கள் எவ்வாறு அறிய முடியும்.
நான் பொதுவாக எதிரணி வீரர்களிடம் பெரிதாக பேசுவது இல்லை. ஆனால் அவர் என்னை அடிக்கடி ஆட்டமிழக்கச் செய்யும் போது நான் அவரிடம் பேசியாக வேண்டும் என நினைப்பேன்.
ஹேரத்துடன் நட்பு முறையில் பேசினேன். ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து நீங்கள் விலகியது நல்லதாகப் போய்விட்டது, ஏனெனில் நான் கொஞ்சம் ஓட்டங்கள் எடுத்துக் கொள்கிறேன் என்று கிண்டல் அடித்தேன்.
மேலும், இந்த டெஸ்ட் தொடரில் நான் சில தவறுகளை அடிக்கடி செய்தேன். நிச்சயமாக அடுத்த முறை இந்தத் தவறுகளை செய்யப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.