ஹேரத்திற்கு முன்கூட்டியே முட்டுக்கட்டை போட்ட டுபிளசி..

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 206 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தென்ஆப்பிரிக்கா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நடைபெற்றது.

இதில் தென்ஆப்பிரிக்க அணி நிர்ணயித்த 488 ஓட்டங்கள் இலக்கை எட்ட முடியாமல் இலங்கை அணி 2வது இன்னிங்சில் 281 ஓட்டங்களில் சுருண்டு தோல்வியைத் தழுவியது.

இந்தியாவுக்கு எதிரான தொடரில் சுழலில் வீழ்ந்த தென்ஆப்பிரிக்கா இலங்கைக்கு எதிராக சுழல்பந்து வீச்சில் கவனமாக இருக்க முடிவு செய்தது.

குறிப்பாக சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் ரங்கன ஹேரத் சிறப்பாக பந்து வீசுவார்.

முன்னதாக அவுஸ்திரேலியாவை இலங்கை அணி 3-0 என வீழ்த்தியதில் இவரது பந்து வீச்சு முக்கிய பங்காற்றியது.

இந்நிலையில் ஆடுகளம் ஐந்து நாட்களும் சுழற்பந்து வீச்சுக்கு எடுபடாத வகையில் தயார் செய்ய தென்ஆப்பிரிக்கா அணி கேட்டுக்கொண்டது. இதன்படியே மைதான ஊழியர்களும் தயார் செய்து கொடுத்துள்ளனர்.

இது தொடர்பாக தென்ஆப்பிரிக்க அணித்தலைவர் டுபிளசி கூறுகையில், நாங்கள் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு எடுபடாத வகையில் ஆடுகளத்தை தயார் செய்ய கேட்டுக்கொண்டோம். அதன்படி ஆடுகளம் அமைத்துக் கொடுத்ததற்கு நன்றி கூறிக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.