(FASTGOSSIP| COLOMBO)- ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் ஏற்பாடு செய்துள்ள “பொறுத்தது போதும்” முதலாவது மக்கள் ஆர்ப்பாட்டம், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில், எதிர்வரும் 08ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு, கண்டியில் நடத்தப்படுமென, குறித்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெரும தெரிவித்திருந்தார்.
எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று(27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர்;
“.. கண்டியில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் நாடு முழுவதிலும் அரசாங்கத்துக்கு எதிராக 10 பாரிய பேரணிகளை தாம் முன்னெடுக்கவுள்ளோம், ஜனாதிபதித் தேர்தல் நடக்கவிருக்கின்ற டிசம்பர் மாதம் 07ஆம் திகதி வரையில் இந்தப் பேரணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்..
எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பாராளுமன்ற, மாகாண சபை, பிரதேச சபை உறுப்பினர்கள் இந்தப் பாரிய பேரணியில் கலந்து கொள்ள உள்ளனர்..”
இதேவேளை, மார்ச் மாதம் ஆரம்பிக்கப்படும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள், இறுதியாக டிசம்பர் மாதம் கதிர்காமத்திலிருந்து கொழும்புக்கு பாதயாத்திரையோடு நிறைவு செய்யப்படும்..” அவர் இதன்போது தெரிவித்தார்.