தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட விவகாரம் – விசாரணைக்கு மீளவும் திகதி குறிப்பு

சுதந்திர தினத்தின் தேசிய வைபவத்தில் தேசிய கீதம், தமிழ்மொழியில் பாடப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவுக்கு ஆதரவளிக்கும் சான்றுகை அளிப்பதற்காக, அம்மனு மீதான விசாரணை, எதிர்வரும் செப்டெம்பர் 1ஆம் திகதி வரை உயர்நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன், நீதியரசரான ஈவா வனசுந்தர ஆகியோரடங்கிய நீதிபதிகள் குழாமே மனு, மீதான விசாரணையை ஒத்திவைத்தது.

இந்த மனுத்தொடர்பில், அரசியலமைப்பை வியாக்கியானம் செய்வதற்கு போதியளவான அமர்வொன்று இன்மையினாலேயே, மனுவுக்கு ஆதரவளிக்கும் சான்றுகை கோரப்பட்டுள்ளதாக அந்த நீதியரசர் குழாம் தெரிவித்துள்ளது.

தேசியக் கீதத்தை, 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04ஆம் திகதியன்று தமிழில் பாடியமை அரசியலமைப்புக்கு முரணானது என்றும், அவ்வாறு பாடப்பட்டமையால் அடிப்படைய உரிமை மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில், கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக ஜனாதிபதி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

களனி கல்பொருள்யை வதிவிடமாகக்கொண்ட சன்ஜீய சுதன் பெரேரா, பேலியகொடையை வதிவிடமாகக் கொண்ட பிரதீப் ஆசிரி சொய்சா மற்றும் களனியை வதிவிடமாகக்கொண்ட தொன் பிரேமரத்ன ஆகியோரே இந்த மனுவைத்தாக்கல் செய்துள்ளனர்.