ஹெரோய்னுடன் ஒருவர் கைது

கண்டி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளுக்கு பாரியளவில் ஹெரோய்ன்  விநியோகித்து வந்ததாகக் கூறப்படும் 36 வயதுடைய ஒருவரை  15 இலட்சம் ரூபாய் பெறுமதியான  90 கிராம் 240 மில்லிகிராம் ஹெரோய்னுடன் இன்று வெள்ளிக்கிழமை காலை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குருநாகலைச் சேர்ந்த இந்த சந்தேக நபர், தற்போது சிறைத்தண்டனை அனுபவிக்கும் பிரபல போதைப்பொருள் வியாபாரி ஒருவருடன் தொடர்புகொண்டு அவரின் வழிகாட்டலில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு தடவைக்கு 100 கிராம் படி  போதைப்பொருளை கொண்டுவந்து கண்டிப் பிரதேசத்திலுள்ள சிறு வியாபாரிகளுக்கு விநியோகம் செய்துள்ளதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

சிறு வியாபாரிகளுக்கு போதைப்பொருளை விநியோகிப்பதற்கு இவர் புதிய முறையைக் கையாண்டுள்ளார்.

சிறு வியாபாரிகளிடம் ஈசி கேஷ் முறையில் பணம் பெற்றுக்கொள்ளும் இவர், அவர்களுடைய பணம் கிடைத்த பின் அவர்களுக்கு தேவையான போதைப்பொருளை பஸ் தரிப்பிடங்களில் மறைத்து வைத்திருந்த நிலையில் பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளதாக விசாரணையிலிருந்து தெரியவருவதாகவும் பொலிஸார் கூறினர்.