நாடு 10 வருடத்தின் பின்னர் கடுமையான வறட்சிக்கு முகம் கொடுத்துள்ளது இருப்பினும் எதிர்வரும் மார்ச் மாதம் வரையில் மின்சார தடை ஏற்படாது. வறட்சி கடுமையாக இருக்கும் என மின்வலு மற்றும் புதுபிக்கதக்க சக்தி பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்தார்.
மின்வலு மற்றும் புதுபிக்கதக்க சக்தி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள வறட்சியான சூழலினால் மின்சார உற்பத்தியின் கனிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. முன்னர் 85 வீதமாக இருந்த உற்பத்தி தற்போது 35 வீதமாக குறைவடைந்துள்ளது. இந்நிலையில் ஒரு வருடத்திற்கு அதிகமா செயலிழந்து காணப்பட்ட நுரைசோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் இயந்திரம் ஒன்று தற்போது மீள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அந்த இயந்திரத்தின் செயற்பாடுகள் நீடித்தால் எமக்கு மின் உற்பத்தியை அதிகரித்துக்கொள்ள முடியும்.
அதனால் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியானது அச்சுறுத்தலான நிலைப்பாட்டினை தோற்றுவித்துள்ளது. இருப்பினும் மார்ச் மாதம் மழைவீழ்ச்சி பதிவாகும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது ஆனால் அவ்வாறு மழைவீழ்ச்சி கிடைக்கது போனால் மின் தடை ஏற்படும்.
ஆனால் மார்ச் மாதம் வரையில் மின்சாரத் தடை ஏற்படாமல் பாதுக்க முடியுமான அளவு தற்போதைய மின் உற்பத்தி உள்ளது. அதனால் இலங்கையின் சில தனியார் நிறுவனங்கள் மற்றும் துறைமுகங்கள் என்பவை பாவனை செய்யும் தன்னியக்க மின் உற்பத்தி இயந்திர்களிடத்திலிருந்து அதிக விலை கொடுத்து தேசிய மின் கட்டமைப்பிற்கு மின்சாரத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அரசாங்கம் உள்ளது.
தற்போது எமது நாடு 10 வருடங்களின் பின்னர் வருகின்ற கடுமையான வறட்சிக்கு முகம்கொடுத்து வருகின்றது. அதனால் அதிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான முன்னெடுப்புக்களை தற்போது மேற்கொண்டு வருகின்றோம். சூரிய சக்தி மின் உற்பத்தியை அதிகரிப்புச் செய்வதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.. எனவும் தெரிவித்திருந்தார்.