1000 ரூபா சம்பள விவகாரம்: பெருந்தோட்ட கம்பனிகளின் மனு தள்ளுபடி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

தேயிலை மற்றும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்களின் நாளார்ந்த  அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக  நிர்ணயம் செய்து வெளியிடப்பட்ட அதி விஷேட வர்த்தமானிக்கு, எதிராக, பெருந்தோட்ட கம்பனிகள் தாக்கல் செய்த எழுத்தாணை மனுவை ( ரிட் மனு ) தள்ளுபடி செய்து மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று ( 9)  தீர்ப்பளித்தது.

மேன் முறையீட்டு நீதிமன்றின்  நீதிபதி மாயதுன்ன கொரயா இதற்கான தீர்ப்பை நீதிபதி சோபித்த ராஜகருணாவின் ஒப்புதலுடன்  மேன் முறையீட்டு நீதிமன்றின் 303 ஆம் இலக்க நீதிமன்ற அறையில் பிற்பகல் 1.30 மணியளவில் அறிவித்தார்.

இந்த விவகாரம்  தொடர்பிலான ரிட் மனு  இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின்  நீதிபதி சோபித்த ராஜகருனா மற்றும் நீதிபதி மாயாதுன்னே கொராயா ஆகியோர் முன்னிலையில் தீர்ப்பறிவிக்கப்படுவதற்காக விசாரணைக்கு வந்தது.

அக்கரப்பத்தனை பெருந்தோட்டக் கம்பனி, பலாங்கொடை பெருந்தோட்டக் கம்பனி, எல்பிட்டிய பெருந்தோட்டக் கம்பனி, ஹப்புகஸ்தென்ன பெருந்தோட்ட கம்பனி, ஹொரனை பெருந்தோட்டக் கம்பனி, கேகாலை பெருந்தோட்டக் கம்பனி, களனி வெலி பெருந்தோட்டக் கம்பனி, கொட்டகல பெருந்தோட்டக் கம்பனி, மடுல் சீமை பெருந்தோட்டக் கம்பனி, மல்வத்தை வில்லா பெருந்தோட்டக் கம்பனி, மஸ்கெலியா பெருந்தோட்டக் கம்பனி, மத்துரட்ட பெருந்தோட்டக் கம்பனி, நமுனுகுல பெருந்தோட்டக் கம்பனி, தலவகாலை தேயினை  தோட்டம், உட புசல்லாவை பெருந்தோட்டக் கம்பனி, வட்டவல பெருந்தோட்டக் கம்பனி, ஹெட்டன் பெருந்தோட்டக் கம்பனி, பொகவந்தலாவை தேயிலை தோட்டம், லலன் இறப்பர் பிரைவட் லிமிடட் ஆகிய  20 கம்பனிகள், கடந்த 2021 மார்ச் 12 ஆம் திகதி, மேன் முறையீட்டு நீதிமன்றில் இந்த ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தனர. சி.ஏ. ரிட் 143/ 2021 எனும் குறித்த மனுவில் பிரதிவாதிகளாக தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தொழிலாளர் ஆணையாளர்  நாயகம் பிரபாத் சந்ர கீர்த்தி,  தேயிலை தொழிற் துறை சம்பள நிர்ணய சபையின் தலைவர் உள்ளிட்ட 18 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.

மனுதாரர்கள் சார்பில்  ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, சிரேஷ்ட சட்டத்தரணி  சுகத் கல்தேரா, சட்டத்தரணி நிரான் அங்கிடெல் ஆகியோர் ஆஜராகினர்..

முதல் பிரதிவாதி தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, 2 ஆம் பிரதிவாதி தொழிலாளர் ஆணையாளர்  நாயகம் பிரபாத் சந்ர கீர்த்தி,   ஆகியோர் சார்பில், சட்ட மா அதிபர் திணைக்களத்தின்  மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் சுசந்த பாலபட்டபெந்திகேவுடன் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் விக்கும் டி ஆப்றூ,  பிரதி சொலிசிட்டர் ஜெனரால் அனுஷா பெர்னான்டோ,  சிரேஷ்ட அரச சட்டவாதி  மனோஹர ஜயசிங்க ஆகியோர் ஆஜராகினர்.

3,4,9,14 மற்றும் 15 ஆம் பிரதிவாதிகள் சார்பில்   சிரேஷ்ட சட்டத்தரணி கெளசல்ய நவரத்ன ஆஜரானார்.

5 ஆம், 17 ஆம் பிரதிவாதிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அவிந்ர ரொட்ரிகோ ஆஜரானதுடன் 6 ஆம், 18 ஆம் பிரதிவாதிகள் சார்பில்  சிரேஷ்ட சட்டத்தரணி கே.சி. ஸ்டெப்னி ஆஜராகிறானார்.

7,8,11,12 ஆம் பிரதிவாதிகள் சார்பில்  சிரேஷ்ட சட்டத்தரணி மலிந்த ஜயசிங்க ஆஜரானதுடன் 10,16 ஆம் பிரதிவாதிகள் சார்பில்  சட்டத்தரணி  எஸ்.எச்.ஏ. மொஹம்மட்டும், 13 ஆம் பிரதிவாதி சார்பில் சட்டத்தரணி விஸ்வ விமுக்தியும் ஆஜராகினர்.

இந் நிலையில், தேயிலை மற்றும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்களின் நாளார்ந்த  அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக  நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டுள்ள அதி விஷேட வர்த்தமானிக்கு, பெருந்தோட்டக் கம்பனிகள் கோரும்  இடைக்கால தடையுத்தரவை வழங்குவதை  முதலில் மேன் முறையீட்டு நீதிமன்றம்  கடந்த 2021 ஏப்ரல் 5 ஆம் திகதி  நிராகரித்தது.  மனுதாரர்களான பெருந்தோட்ட கம்பனிகள்  கோரும் இடைக்கால தடை உத்தர்வினை வழங்கினால், அதனால் அதிக பாதிப்பு தொழிலாளர்களுக்கே ஏற்படும் என சுட்டிக்காட்டிய மேன் முறையீட்டு நீதிமன்றின் அப்போதைய தலைமை நீதிபதி அர்ஜுன ஒபேசேகர,  இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்க எந்த சட்ட ரீதியிலான அடிப்படைகளும் இல்லை எனக் கூறி அக்கோரிக்கையை நிராகரிந்தார்.

11 பக்கங்களைக் கொண்ட குறித்த  தீர்மானத்தை, சக நீதிபதியான மாயதுன்ன கொரொயாவின் ஒப்புதலுடன், அப்போதைய  தலைமை நீதிபதி அர்ஜுன ஒபேசேகர அறிவித்ததுடன்,  குறித்த எழுத்தாணை  மனுவினை விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்திருந்தார்.

அதன் பின்னர் அப்போதைய  தலைமை நீதிபதி அர்ஜுன ஒபேசேகர உயர் நீதிமன்ற நீதியரசராக பதவி உயர்வு பெற்றுச் சென்ற பின்னர்,  மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி சோபித்த ராஜகருனா மற்றும் நீதிபதியான மாயதுன்ன கொரொயா ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரிக்கப்பட்டது.

குறித்த விசாரணைகள் மற்றும் எழுத்து மூல சமர்ப்பணங்கள் அனைத்தும் நிறைவடைந்த பின்னர், குறித்த மனு இன்று (9) தீர்ப்பறிவிக்கப்படுவதற்காக  திறந்த நீதிமன்றில் அழைக்கப்பட்டது.

இதன்போதே  பெருந்தோட்ட கம்பனிகள் தாக்கல் செய்த எழுத்தாணை   மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிமன்றம் அறிவித்தது.