அறையில் ஆடியல்லவோ அம்பலத்தில் ஆடவேண்டும்?

அறையில் ஆடியல்லவோ அம்பலத்தில் ஆடவேண்டும்?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரசாங்கத்தில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்படும் போது அவற்றை மறைப்பதற்காக அமைச்சர் சரத் வீரசேகர செய்திகளை உருவாக்குவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் எதிர்காலத்தில் அநுரகுமார திஸாநாயக்கவும் வாக்குமூலமளிக்க வேண்டியேற்படும் என்று அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளமைக்கு பதலளிக்கும் போதே அவர் இன்று(21) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;

“.. நாட்டில் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் அவரால் முன்வைக்கப்படும் கருத்துக்கள் சிறுபிள்ளைத்தனமானது என்ற போதிலும், அவை பாரதூரமானவை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடையவுள்ளன. இது தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்தோடு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சுமார் 15 மாதங்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. சரத் வீரசேகர அல்லது அரசாங்கத்திலுள்ள எவரும் இதுவரையில் ஆணைக்குழுவிற்குச் சென்று என்னிடம் வாக்குமூலம் பெறப்பட வேண்டும் என்று கூறவில்லை.

அத்தோடு குற்ற விசாரணை பிரிவும் இதுவரையில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் என்னிடம் வாக்குமூலம் பெற வேண்டும் என்று எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குறிப்பிடாத நிலையில் , திடீரென சரத் வீரசேகரவிற்கு என்னைப்பற்றிய ஞாபகம் ஏற்படுவதற்கான காரணம் என்ன ?..” என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.