கையேந்தும் இலங்கை

கையேந்தும் இலங்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐ. நா மனித உரிமை சபையில் (46வது) நாற்பத்தி ஆறாவது கூட்டத் தொடரில், இலங்கை மீது தயாராகியுள்ள தீர்மானத்தின் திருத்த வரைவு (A/HRC//L-/REV.1) சில சில மாற்றங்களுடன் மனித உரிமை சபையின் செயலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மார்ச் மாதம் 16ஆம் திகதி பதிவாகியுள்ளது.

முன்னைய தீர்மானங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது – எதிர்வரும் திங்கட்கிழமை ஜெனிவா நேரம் மதியத்தின் பின்னர் வாக்கெடுப்பிற்கு, ஐ. நா மனித உரிமை சபையில் வரவுள்ள தீர்மானம் பற்றி எழுதுவதானால், ஓர் புத்தகமே எழுதுவதற்கான தகவல்கள் உள்ளன.

விசேடமாக தீர்மானத்தை முன் நகர்த்தும் நாடுகளும் தீர்மானத்தின் உள்ளடக்கமும், ஐ.நா மனித உரிமை ஆணையாளரும் அவரது எதிர்பார்ப்பும், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் உலக முக்கியஸ்தர்களும், நாட்டில் பாதிக்கப்பட்டோர் சிவில் அமைப்புக்கள் தமிழ் கட்சிகளும், புலம்பெயர் வாழ் செயற்பாட்டாளரும் அமைப்புகளும், இலங்கை அரசும் அவர்கள் சார்ந்த செயற்பாடுகளுமென பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இவற்றில், நாம் தீர்மானத்தையும், அதை முன் நகர்த்தும் நாடுகளையும் பார்ப்போமானால், தீர்மானம் ஏற்கனவே கூறியது போல், பாதிக்கப்பட்ட மக்களை திருப்தி தருவதாக இல்லை. ஆனால் இத் தீர்மானம் முன்னைய தீர்மானங்களிலிருந்து வேறுபட்டுள்ளது.

இதற்கு, கடந்த பத்து பன்னிரண்டு வருடங்களாகச் இலங்கை அரசின் கபடம் நிறைந்த செயற்பாடுகளுடன், ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இலங்கை பற்றிய காரசாரமான அறிக்கை காரணியாகவுள்ளது.

இத் தீர்மானத்தை முன்நகரத்திய நாடுகளை நாம் பார்க்கும் பொழுது, பிரித்தானியா உட்பட மற்றைய இணைத் தலைமை நாடுகளான கனடா, ஜேர்மனி, மலாவி, மொன்றநீக்கிரோ, வட – மசிடோனியா ஆகியவை காணப்படுகிறது.

ஆனால் இன்றைய நிலையில் இத் தீர்மானத்திற்கு மொத்தமாக நாற்பது (40) ஐ. நா அங்கத்துவ நாடுகள் ஆதரவு வழங்குகின்றன. அதாவது, இத் தீர்மானத்தை முன்மொழிகின்றனர். இவற்றில் பதின்மூன்று நாடுகள், ஐ.நா மனித உரிமை சபையின் அங்கத்துவ நாடுகளாகும்.

அடுத்து ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பங்கு, இலங்கை பற்றிய அறிக்கை சமர்ப்பித்ததுடன் முடிந்திருந்தாலும், சில நாடுகள் ஆணையாளருடன் உத்தியோகப் பற்றற்ற கலந்துரையாடல்களை நடத்துவது வழமை. கடுமையான அறிக்கையைச் சமர்ப்பித்த ஆணையாளர் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுவார் என்பது யதார்த்தம்.

அடுத்து சர்வதேச மனித உரிமை அமைப்புக்களான, சர்வதேச மன்னிப்பு சபை, மனித உரிமை கண்காணிப்பகம், ஐ.சி.யே, இமாடார் போன்ற பல அமைப்புக்கள் இலங்கை மீது மிகவும் கடுமையான நடவடிக்கைக்கு குரல் கொடுத்துள்ளதுடன், தற்பொழுது இத் தீர்மானம் வெற்றி பெற கடுமையாக உழைக்கின்றனர்.

இதேவேளை, உலக முக்கியஸ்தர்களான முன்னாள் ஐ.நா மனிதர் உரிமை ஆணையாளர்களுடன் பல நோபல் பரிசு பெற்ற முக்கிய புள்ளிகள் இத் தீர்மானம் வெற்றிபெற தமது கடமைகளைச் செய்து கொண்டிருக்கின்றனர்.

அடுத்து நாட்டில் பாதிக்கப்பட்டோரின் போராட்டங்களான காணாமல் போனோரது பெற்றோர், உறவினர்களது போராட்டங்கள் பல வருடங்களாக தொடருகின்றன.

இத் தீர்மானம் அவர்களிற்கு திருப்தி தரும் செய்தி ஒன்றையும் கூறாதது கவலைக்குரிய விடயம்.

இலங்கையின் சிவில் அமைப்புக்கள், விசேடமான வடக்கு கிழக்கில் உள்ள அமைப்புக்கள் பல சிக்கல்கள் நெருக்கடிகள் அழுத்தங்களுக்கு மத்தியில் தம்மால் முடிந்த வேலைத் திட்டங்களை மேற்கொள்கின்றனர்.

வடக்கு கிழக்கு வாழ் அரசியல் கட்சிகளும் தலைவர்களும், ஐ.நா தீர்மானம் என்ற பெயரில், தமது வாக்கு வங்கியை நோக்கிய வேலை திட்டங்களையே மேற்கொள்கின்றனர்.