
மௌனித்தது ‘புர்கா’
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதை தடை செய்யும் வகையிலான அமைச்சரவை பத்திரம் தொடர்பில் அண்மையில் அதிகளவில் பேசப்பட்டது. எனினும், சர்வதேச ரீதியில் ஓரிரு தினங்கள் அதிகளவில் பேசப்பட்ட இந்த விடயம், திடீரென மௌனமாகியது.
இலங்கை முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதை தடை செய்யும் வகையிலான அமைச்சரவை பத்திரத்தில் தான் கையெழுத்திட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கடந்த 13ம் திகதி களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், இந்த கருத்தை வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து, புர்கா அணிவதை தடை செய்யும் விவகாரம், சர்வதேச ரீதியில் அதிகளவில் பேசப்பட்டது.
ஏற்கெனவே, கொவிட் தொற்றினால் உயிரிழக்கும் இஸ்லாமியர்களின் ஜனாஸாக்களை (உடல்களை) அடக்கம் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் சுமார் ஒரு வருடமாக மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், பல்வேறு தரப்பினரின் ஆர்ப்பாட்டங்கள், கோரிக்கைகள், அழுத்தங்களுக்கு மத்தியில், ஜனாஸாக்களை அடக்கம் செய்ய தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஜனாஸா விவகாரம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னரான காலத்தில், தற்போது புர்கா தடைக்கான யோசனை முன்வைக்கப்பட்டு, நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இலங்கையில் புர்காவிற்கு தடை ஏற்படுத்தப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர அறிவித்திருந்த நிலையில், மீண்டும் எதிர்ப்பு வலுப்பெற்று வருகிறது.
புர்கா தடை ஏற்படுத்தப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட கருத்தை அடுத்து, இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
இவ்வாறான நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயத்தின் பின்னரே, ஜனாஸா அடக்கத்திற்கான அனுமதியை இலங்கை வழங்கியதாகவும், பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரின் எதிர்ப்புக்கு பின்னர் புர்கா தடைக்கான பேச்சு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இஸ்லாமிய சமூகத்தினர் கருத்து வெளியிட ஆரம்பித்துள்ளனர்.