கருத்துக்களம் : ரிஷாட் மீது, ஏன் இந்த வன்மம்..?
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபடுத்தி, பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சி.ஐ.டியில் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் அவசர அவசரமாக நீதிமன்றுக்கு கொண்டுவரப்பட்டு, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் எம்.பியை, இன்னும் பழிவாங்கும் நோக்கிலேயே அரச இயந்திரம், தமது செயற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளதாக கவலைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன, அவர் சுமார் 06 மாத காலமாக தடுத்து வைக்கப்பட்டும் சிறை வைக்கப்பட்டும் சொல்லொணா நெருக்கடிகளை அனுபவித்து வருகின்றார்.
இஷாலினியின் மரணத்துடன் ரிஷாட் பதியுதீன் எம்.பியை முடிச்சுப் போட்டு, அந்த வழக்கில் கூட அவருக்கு பிணை வழங்க மறுக்கும் அளவுக்கு, அரச மேலாண்மையின் வக்கிரப்புத்தி இருக்கிறது.
ஈஸ்டர் தாக்குதலுடன் அவருக்கு தொடர்பு உண்டென நிரூபிக்க முடியாமல் திணறும் இவர்கள், அந்த வழக்கிலும் உரிய முறையில் பிரசன்னமாவதை தவிர்த்து வருகின்றனர். நீதிமன்றுக்கு உரிய ஆதாரங்களுடன் பிரசன்னமாக முடியாமல் தத்தளிக்கும் இவர்கள், இஷாலினியின் விவகாரத்துடன் ரிஷாட் பதியுதீனை சிக்கவைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர்.
இஷாலினியின் வழக்கில் ரிஷாட்டை 05 வது சந்தேக நபராக வேண்டுமென்றே கோர்த்து, அவருக்கு பிணை வழங்க இடமளிக்க மறுக்கின்றனர். போலிக் காரணங்களை நீதிமன்றில் தெரிவிக்கின்றனர்.
இஷாலினி என்ற யுவதி ரிஷாட் எம்.பி வீட்டுக்கு உதவியாளராக பணிக்கு வந்த சமயம், அவர் அப்போது வீட்டில் இருக்கவில்லை, பிறிதொரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். அதேபோன்று, இஷாலினியின் மரணம் நடந்த சந்தர்ப்பத்திலும், அவர் தனது வீட்டில் இருக்கவில்லை. அந்த சம்பவம் இடம்பெறுவதற்கு 03 மாதங்களுக்கு முன்னரே, ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு, தொடர்ந்தும் சிறையில் இருக்கின்றார்.
ஆனால், இஷாலினியின் வழக்கில் அவரை 05வது பிரதிவாதிகளில் ஒருவராகக் கோர்த்து, நீதிமன்றில் கொண்டுவந்து, இந்த வழக்கிலும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைத்தனர்.
அதேபோன்று, இன்று (01) நடைபெற்ற குறித்த வழக்கு தொடர்பான விசாரணையிலும், அவரை மீண்டும் 14 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் வேதனை என்னவென்றால், இந்த மரணத்துடன் தொடர்புள்ளதாக கருதப்பட்டு, கைது செய்யப்பட்ட நால்வருக்கும் பிணை வழங்கப்பட்ட நிலையில், இரு சந்தர்ப்பங்களிலும் வீட்டில் இல்லாத இவருக்கு மட்டும் பிணை வழங்க நீதிமன்றில் அதிகாரிகள் மறுப்பு தெரிவிப்பது ஏன்? கற்பனைக் காரணங்களைக் கூறி அவருக்கு பிணை வழங்காமல் இருப்பது நியாயம்தானா?
ரிஷாட் பதியுதீன் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டால், சமூகம் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினைகள் தொடர்பில் மேல்மட்டத்தை தட்டிக்கேட்டு விடுவாரோ? என்ற அச்சமோ தெரியவில்லை. அவரை தொடர்ந்தும் சிறையில் வைத்திருப்பது யாரைத் திருதிப்படுத்த? என்ற கேள்விகள் ஜனநாயகத்தை நேசிக்கும் சக்திகளிடம் எழுந்து நிற்கின்றன.
எனவே, இந்த நிலையில் நாம் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு, அவரின் விடுதலைக்காக இறைவனிடம் கையேந்துவது மாத்திரமே, அவரின் துரித விடுதலைக்கு வழி சமைக்கும்.
– உமர் இக்பால் –