நானி – சமந்தா கூட்டணி
(ஃபாஸ்ட் நியூஸ் | ஹைதராபாத்) – நானி நடிக்கவுள்ள ‘தசரா’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் சமந்தா.
‘ஷ்யாம் சிங்கா ராய்’ படப்பிடிப்பை முடித்துவிட்டு ‘அன்டே சுந்தரானிகி’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் நானி. இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீகாந்த் ஓடிலா இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கத் திகதிகள் ஒதுக்கியுள்ளார் நானி.
அக்டோபர் 15-ம் திகதி இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. ‘தசரா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் அறிவிப்புக்கான மோஷன் போஸ்டரே சமூக வலைதளத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
தற்போது, இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. அவர் ஒப்பந்தமாகிவிட்டதாகவும், இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பைப் படக்குழு விரைவில் அறிவிக்கும் எனவும் கூறப்படுகிறது.
இந்தப் படத்துக்கு முன்னதாக, ‘நீதானே என் பொன்வசந்தம்’ தெலுங்கு பதிப்பு மற்றும் ‘ஈகா’ ஆகிய படங்களில் நானி – சமந்தா இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நானி – சமந்தா இணைந்து நடிக்கும் 3-வது படமாக ‘தசரா’ அமைந்துள்ளது.
‘தசரா’ படத்தின் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.