உக்ரைன் ஜனாதிபதியுடன் நேரடியாக பேசுமாறு புடினுக்கு அழுத்தம்!

உக்ரைன் ஜனாதிபதியுடன் நேரடியாக பேசுமாறு புடினுக்கு அழுத்தம்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

உக்ரைன் ஜனாதிபதியுடன் நேரடியான, தீவிரமான பேச்சுவார்த்தைகளை நடத்துமாறு ரஷ்யாவின் விளாடிமிர் புடினிடம் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொலைபேசியில் சுமார் 80 நிமிடங்கள்

ஜெர்மன் அதிபர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இம்மானுவேல் மெக்ரோன் மற்றும் ஓலாஃப் ஸ்கோல்ஸ் ஆகியோர் புடினுடன் தொலைபேசியில் சுமார் 80 நிமிடங்கள் பேசியுள்ளனர்.

எனினும் புடினுக்கும், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கிக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தைக்கான சாத்தியக்கூறுகள் பற்றி அவர் எதனையும் குறிப்பிடப்படவில்லை.

உக்ரைன் நிலைப்பாடு

ஏற்கனவே மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கு அவசியமாக இருக்கும் என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தைக்கு ஆவலுடன் இருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

கடந்த பெப்ரவரி 24 அன்று ரஷ்யா படையெடுத்ததிலிருந்து ரஷ்ய மற்றும் உக்ரைனிய தூதுக்குழுக்கள் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தின. எனினும் அவற்றால் பயன்கள் ஏற்படவில்லை.

மரியுபோல் போர்க்கைதிகள்

இதேவேளை மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் இரும்பு தொழிற்சாலையில் இருந்து போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்ட 2,500 உக்ரைனிய போராளிகளை விடுவிக்க பிரான்ஸ் மற்றும் ஜெர்மனிய தலைவர்கள் புடினிடம் வலியுறுத்தினர்.

இதற்கிடையில் கைதிகள் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று உக்ரைன் நம்புகிறது – ஆனால் ரஷ்யா அதை உறுதிப்படுத்தவில்லை.