அவசரகால நிலையை நீடிப்பது தொடர்பில் இன்று விவாதம்

அவசரகால நிலையை நீடிப்பது தொடர்பில் இன்று விவாதம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று இடம்பெறவுள்ளது. நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்குக் கூடவுள்ளது.

இதன்போது, பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், பதில் ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலை தொடர்பில் பிற்பகல் 4.30 வரை விவாதிக்கப்பட்டவுள்ளது.

கடந்த 17 ஆம் திகதி, 2288/30ம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம், ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக செயற்பட்ட காலத்தில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.

சட்ட விதிகளுக்கு அமைய, 14 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தின் அனுமதி பெறப்படாவிட்டால், அவசரகால நிலைமைப் பிரகடனம் இரத்தாகிவிடும்.

மக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியைப் பாதுகாத்தல், பொதுமக்கள் வாழ்வுக்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகள் என்பவற்றைப் பேணுவதற்கு, பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின்கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய இந்தப் பிரகடனம் செய்யப்பட்டது.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிந்த ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதையடுத்து ஏற்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள வஜிர அபேவர்தன இன்று சத்தியபிரமாணம் செய்துக்கொள்வார்.

அவரது பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டு வர்த்தமானியின் ஊடாக பிரசுரிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், இன்றைய சபை அமர்பில், அவர் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியபிரமாணம் செய்துக்கொள்வார் என நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.