வெலிக்கடை சிறையில் கொல்லப்பட்டவர்களின் சடலங்களை எங்கே புதைத்தீர்கள்?

வெலிக்கடை சிறையில் கொல்லப்பட்டவர்களின் சடலங்களை எங்கே புதைத்தீர்கள்?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  1983 ஆம் ஆண்டு யூ லைக் கலவரத்தின் போது சிறைச்சாலைகளிலே கொல்லப்பட்ட 53க்கும் அதிகமானவர்களின் உடல்கள் எங்கே புதைக்கப்பட்டன? இது தொடர்பான உண்மையை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் பாராளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பினார்.

அவசரகால நிலையை நீடிப்பது தொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய செல்வம் அடைக்கல நாதன், மிகவும் துயரம் தோய்ந்த, கரிநாளில் இந்த விவாதத்தில் பங்கு கொள்கின்றேன். 39 ஆண்டுகளுக்கு முன் இதே தினத்தில் தான் அப்பாவி தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள். வெலிக்கடை சிறையில் குட்டிமணி,தங்கத்துரை, ஜெகன், காந்திய தலைவர் ராஜசுந்தரம் உட்பட ஏராளமானவர்கள் மிலேச்சத்தனமாக கொல்லப்பட்டார்கள்.

இந்த உயரிய சபையிலே அதனைப் பற்றி எவருமே பேசவில்லை. அவசரகால சட்டத்தை நீடிக்கும் இந்த நிலையிலாவது நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஆகவே, இந்த நிலையை தமிழர்களாகிய நாங்கள் மிகவும் கவலையுடன் பார்க்கிறோம். இந்த சபையிலே அவர்களுக்காக எங்களது இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அவசர கால சட்டத்தை உருவாக்கியவர் ஜே.ஆர். ஜயவர்த்தன. இன்றைய நிலையில் சிங்கள மக்களோடு இணைந்த ஒரு செயல் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இப்படியான முன்னெடுப்புகளை நாம் எதிர்க்கவில்லை. இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு அனைவரும் இணைந்து செயல்பட முன் வாருங்கள் என செல்வம் அடைக்கலநாதன் வேண்டுகோள் விடுத்தார்.