பெறுபேறுகள் வெளியாகாமைக்கு கண்டனம்

பெறுபேறுகள் வெளியாகாமைக்கு கண்டனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஆசிரியர் பயிற்சியினை நிறைவு செய்த ஆசிரிய உதவியாளர்களின் இறுதித் தேர்வுக்கான பெறுபேறுகள் இதுவரை வெளியிடப்படாதுள்ளமையை  வன்மையாக கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் கல்வி அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

2015 ஆண்டு  ஆசிரிய உதவியாளர்களாக நியமிக்கப்பட்டு, வர்த்தமானியின் பிரகாரம் ஆசிரியர் பயிற்சி கல்லூரிக்கு உள்வாங்கப்பட்டனர்.

இதனையடுத்து, ஆசிரியர் பயிற்சி நெறியை நிறைவு செய்து  இறுதிப் பரீட்சைக்குத் தோற்றிய ஆசிரியர்களின் பரீட்சை பெறுபேறுகள் இதுவரை வெளியிடப்படாதுள்ளன.

கஷ்டப்பிரதேச பாடசாலைகளில் குறிப்பாக பெருந்தோட்டத்துறை பகுதிகளில் பணிபுரிபவர்களை ஆசிரியர்களாக ஆட்சேர்ப்பு செய்வதற்கு இந்தப்பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட வேண்டும்.

இது தொடர்பில் ஏலவே கல்வி அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவந்தபோதும் பரீட்சை திணைக்களம் இதுவரை எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

இதன் காரணமாக கல்விமாணி பட்டப்  படிப்புகளைப் கற்கும்  வாய்ப்பினையும் குறித்த ஆசிரியர்கள் இழந்துள்ளனர்.

மிகவும் கடினமான சூழ்நிலையில் 10 ஆயிரம் ரூபாவினை மாத்திரமே பெற்றுக் கொண்டு பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டதுடன் தமது பயிற்சியையும் முடித்து இறுதிப் பரீட்சைக்குத் ஆசிரியர்கள் தோற்றினர்.

மிகவும் சிரமமான சூழ்நிலையின் மத்தியிலும் பணிபுரியும் இந்த ஆசிரியர்களின் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் வலியுறுத்தியுள்ளார்.