அவசரகாலச் சட்டத்துக்கு எதிரான 3 மனுக்களை முன்கொண்டுசெல்ல அனுமதி!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியினால் அவசரகாலச் சட்டம் விதிக்கப்பட்டதால், பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட 3 அடிப்படை உரிமை மனுக்களை முன்கொண்டு செல்ல உயர் நீதிமன்றம் இன்று (12) அனுமதி வழங்கியுள்ளது.
எவ்வாறாயினும், அவசரகாலச் சட்டத்தை இடைநிறுத்துவதற்கான இடைக்கால உத்தரவு எதுவும் இந்த சந்தர்ப்பத்தில் பிறப்பிக்கப்படாது என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அத்துடன், சம்பந்தப்பட்ட அவசரகாலச் சட்ட ஒழுங்குமுறைகளில் உள்ள விடயங்களை மீள்பரிசீலனை செய்யுமாறும், அவ்வாறு ஏதேனும் திருத்தம் செய்யப்படுமாயின் இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசர்களான விஜித் மலல்கொட, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
லிபரல் இளைஞர் இயக்கத்தின் அழைப்பாளர்களான சட்டத்தரணிகள் நமினி பண்டித மற்றும் ருசிரு ஏகொட, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் மற்றும் மாற்றுக் கொள்கை மையம் மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்யசோதி சரவணமுத்து ஆகிய தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் மனு மீதான விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.