பொது மக்களுக்கு நிவாரண பொதி
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நிவாரண பொதியொன்று எதிர்வரும் திருத்தி அமைக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட முன்மொழிவு மூலம் பொது மக்களுக்கு வழங்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போது இதுதொடர்பாக அறிவித்தார்.
உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பருப்பு போன்ற இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்புக்கு, ரூபாவிற்கு ஈடாக டொலரின் மதிப்பு அதிகரிப்புடன் வாழ்க்கைச் செலவும் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
203 ரூபாவாக இருந்த டொலரின் பெறுமதி இன்று 365 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அந்நியச் செலாவணி அதிகரித்ததன் காரணமாக பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளதாகவும் இதன் மூலம் பணவீக்கம் அதிகரித்து அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசியும் உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர், விலைவாசி உயர்வைத் தடுக்க முடியாத நிலை இருப்பதாகவும் கூறினார்.
திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு வெளிநாட்டு உதவிகளின் ஊடாக உதவ திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.