பெருந்தோட்ட சமூகத்தினருக்கு இணையவழி மருத்துவ சிகிச்சை சேவை!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள, புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையானது, பெருந்தோட்ட சமூகத்தினருக்கான இணையவழி மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை சேவையை ஆரம்பிக்கவுள்ளது.
பதுளை மாவட்டத்தில் இதல்கஸ்ஹின்ன தோட்டத்தை மையமாக கொண்டு இந்த புதிய சேவை எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல, செத்சிறிபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சில் நேற்றுமுன்தினம் (16) தோட்ட வீடமைப்புப் பிரிவின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் தோட்ட வீடமைப்புப் பிரிவின் கீழ், சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த அறக்கட்டளை, பெருந்தோட்ட மனித அபிவிருத்தி அறக்கட்டளை மற்றும் புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவை இயங்கி வருகின்றன.
இலங்கையின் மொத்த சனத்தொகையில் பெருந்தோட்ட சமூகம் சுமார் 5% ஐ பிரதிநிதித்துவப்படுத்துகிறது. நாட்டின் மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்தின் பெருந்தோட்டப் பகுதிகளிலும் சமூகம் வாழ்கிறது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனையின் பேரில் நடைமுறைப்படுத்தப்படும் மருத்துவ சிகிச்சை சேவை திட்டத்திற்கு O-DOC என பெயரிடப்பட்டுள்ளது.
இதற்காக ஒரு குடும்பத்திற்கு மாதம் 100 ரூபா செலவாகும். குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் இந்த சேவையைப் பெறலாம்.
இதன் கீழ், 150க்கும் மேற்பட்ட மருத்துவர்களின் சேவையை 24 மணி நேரமும் கிடைக்கிறது.
எதிர்காலத்தில் நாட்டின் ஏனைய பெருந்தோட்டப் பகுதிகளிலும் உள்ள மக்களுக்கும் இந்த மருத்துவச் சிகிச்சை சேவையை நடைமுறைப்படுத்துமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, “பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதார அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.
எதிர்காலத்தில் அதற்காக சில சிறப்பு திட்டங்களை தொடங்க உள்ளோம். எவ்வளவோ பொருளாதாரச் சிரமங்கள் இருந்தாலும் பெருந்தோட்ட மக்களின் நலனுக்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது.
அவர்களின் குடியிருப்பு, குடிநீர், சுகாதாரம், கல்வி மற்றும் பிற வசதிகளை மேம்படுத்த முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
அத்துடன், சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால பாதீட்டின் ஊடாக, தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் பெருந்தோட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு விசேட கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது” என அமைச்சர் தெரிவித்தார்.