நுரைச்சோலை லக்விஜய ஊழியர் ஒருவர் பலி
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கற்பிட்டி – நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலைய ஊழியர் ஒருவர் கடலில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் லக்விஜய அனல் மின் நிலையத்தில் கடலுடன் கட்டப்பட்டிருக்கும் இறங்குதுறை (ஜெட்டி) பகுதியிலிருந்து கடலில் வீழ்ந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த அனல் மின் நிலையத்தில் பணிபுரிந்த பல்லம பகுதியைச் சேர்ந்த கனிஷ்ட தொழிநுட்ப உதவியாளரான 32 வயதுடைய பதிராஜ முதியன்சேலாகே ஹர்ஷ ஹேமந்த பிரியசாத் என்பவரே உயிரிழந்ததாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கடலில் வீழ்ந்த நிலையில் உயிரிழந்துள்ள தொழிநுட்ப உதவியாளரின் சடலத்தை மீட்க பொலிஸார், கடற்படையின் சுழியோடி பிரிவு, மீனவர்கள் இணைந்து தேடிவந்தனர்.
இந்த நிலையில், குறித்த நபரின் சடலம் நேற்று (17) மாலை கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலவில பகுதியில் கரையொதுங்கியுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
நுரைச்சோலை பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.