மன்னிப்பு கேட்பதாக இம்ரான் கான் தெரிவிப்பு
(ஃபாஸ்ட் நியூஸ்) – பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பெண் நீதிபதிக்கு எதிரான கருத்துக்கு மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதாகக் கூறியதையடுத்து, அவருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பாகிஸ்தான் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கடந்த ஒகஸ்ட் மாதம் இஸ்லாமாபாத்தில் நடந்த பேரணியின் போது, தேசத்துரோக குற்றச்சாட்டின் பேரில் பி.டி.ஐ தலைவர் ஷபாஸ் கில்லை நீதிபதி விளக்கமறியலில் வைத்ததை இம்ரான் கான் விமர்சித்தார்.
இது நீதிபதிக்கு மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல் என குற்றம் சாட்டப்பட்டது. இந்த சம்பவத்திற்கு அவர் அளித்த முதல் பதில் போதுமானதாக இல்லை என தெரிவித்து, இம்ரான் கானுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவர் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்திற்கு இன்று அழைக்கப்பட்டார்,
ஆனால் நீதிபதியை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்க விருப்பம் தெரிவித்ததையடுத்து, அதற்கு பிரமாணப் பத்திரம் அளித்தாலே போதுமானது என நீதிமன்றம் அறிவித்தது.
நீதிபதியை சந்திப்பது அவரது தனிப்பட்ட விஷயம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
ஒரு வாரத்தில் பிரமாணப் பத்திரம் அளித்த பிறகு, ஒக்டோபர் 3-ம் திகதி நீதிமன்றத்தில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த வழக்கில் இம்ரான் கான் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 5 ஆண்டுகள் அரசியலில் இருந்து தடை விதிக்கப்படும் அபாயம் உள்ளது. பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.