கோட்டாபயவுக்கு மாதாந்தம் 9.5 இலட்சம் செலவு : ஹிருணிக்கா குற்றச்சாட்டு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மக்களின் ஜனநாயக உரிமைகளை அரசாங்கம் தடுக்க முற்படுமாக இருந்தால், மீண்டும் மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் நாட்டில் ஆரம்பமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான ஹிருணிகா பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஜனாதிபதி செயலகத்தினால் மாதாந்தம் 9.5 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று அவருக்கு 15 முதல் 20 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மக்களால் விரட்டியடிக்கப்பட்ட ஒரு ஜனாதிபதிக்கு, இவ்வாறான செலவுகளை ஏன் செய்ய வேண்டும் எனும் கேள்வி எழுகிறது.
தற்போதைய ஜனாதிபதிதான் முன்னாள் ஜனாதிபதி கோட்டாவுக்காக பல சலுகைகளை வழங்கியுள்ளார். இதற்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாட்டு மக்களுக்கு போதுமான உணவு இல்லாத இந்த நேரத்தில், மின்சாரக் கட்டணம் 400 வீததத்தால் உயர்வடைந்துள்ள இந்த நேரத்தில், மத்திய தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில், இவ்வாறான அநாவசிய செலவுகளை அரசாங்கம் செய்து வருகிறது.
நாட்டை இந்த இந்த அழிவு நிலைமைக்குக் கொண்டுவந்த ஜனாதிபதியின் மாதாந்த செலவிற்காக 9.5 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
அரசாங்கம் இவ்வாறு செலவுகளை செய்யும் வேளையில், மறுபுறத்தில் அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியக் கொடுப்பனவு என்பன பாரியளவு குறைக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தந்திரம் தான் இவையெல்லாம். நாடு மிகவும் மோசமான நிலைமையில் உள்ளதாக பிரசாரம் செய்து மக்களுக்கு மேலும் மேலும் சுமைகளை சுமத்துவதே அவரின் திட்டமாகும்.
இதனால்தான் மக்கள் தேர்தலை கோருகிறார்கள். இந்த ஜனநாயக உரிமையைக்கூட மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்க முடியாவிட்டால், ஏனைய கோரிக்கைகளை எவ்வாறு நிறைவேற்றுவார்கள்?
( நன்றி – உதயம் )