கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் பேஷாக்குப் பொதி இடை நிறுத்தம் – சபையில் சஜித் சுட்டிக்காட்டு

கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் பேஷாக்குப் பொதி இடை நிறுத்தம் – சபையில் சஜித் சுட்டிக்காட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கும் பேஷாக்குப் பொதி 2000 ரூபா இலிருந்து 4500 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளமை பாராட்டப்பட வேண்டியதாகும் என்றாலும்,மாத வருமானம் 50000 ரூபாய்க்கு குறைவாக உள்ள தாய்மார்களுக்கு மட்டுமே இது என வரையறுக்கப்பட்டுள்ளதாகவும்,இதன் காரணமாக அரச ஊழியர்கள் உட்பட பல தாய்மார்களுக்கு இந்த சலுகைப் பொதி வழங்கப்படாதுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இன்று (8) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பணவீக்கம் அதிகரித்து வரும் இந்நேரத்தில் இதுபோன்ற சலுகைக் குறைப்பு ஏற்புடையதல்ல எனவும்,சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இந்த மானியத்தை வழங்குவதற்கு மாதாந்தம் 675-700 மில்லியன் ரூபா செலவாகுவதாகவும்,இது வருடாந்தம் 8 பில்லியன் ரூபாவாகும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்போது ஏழு மாவட்டங்களில் 2 வயதுக்குட்பட்ட ஒரு இலட்சத்து ஐந்தாயிரம் குழந்தைகளுக்கு 6750 ரூபாயை யுனிசெப் வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே இந்த 4500 ரூபா கொடுப்பனவை நாட்டிலுள்ள அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் மகளிர் தினத்திலிருந்தோனும் வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்தார்.